நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவாக 1 லட்சம் கையெழுத்துக்கள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாமெனக் கோரி ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை நடேசலிங்கம் – பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloela-வில் வாழ்ந்து வந்தனர்.

அவர்களது Bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததை அடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களது வழக்கின் விசாரணை இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும் வழக்கின் தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த தம்பதியினர் வாழ்ந்து வந்த Biloela பகுதியைச் சேர்ந்த Angela Fredericks என்பவரின் முன்னெடுப்பில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இதன்போது 98 ஆயிரம் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.