அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் நடந்த தவறு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக நடாத்தப்படும் தேர்வில் பிழை இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குடியுரிமைக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் அவ்வாறான ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என இந்த வாரம் தேர்வு எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியானது,

அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான். இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவுஸ்திரேலியாவின் தற்போதைய சனத்தொகை 24 மில்லியனாக உள்ளது.

இந்த நிலையில் குறித்த பிரிட்டிஷ் பெண்மணி கேள்வி குறித்தும், அதற்காக கொடுக்கப்பட்ட பதில் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, சரியான பதில் 22 மில்லியன் எனக் குறிப்பிட்டதுடன் ஏற்கனவே கணினியில் பதிவேற்றப்பட்ட தரவுகளை மாற்றுவது மிகவும் கடினம் எனக் கூறியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக எழுதப்படும் தேர்வில் 20 கேள்விகளில் 15 கேள்விகளுக்கு சரியான பதில்களை வழங்க வேண்டும்.

இந்த நிலையில் இவ்வாறான பிழைகளால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என குறித்த பெண்மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் உள்துறை அமைச்சைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு,

குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அதன் உள்ளடக்கம் தொடர்பில் உடனடியாக கருத்துக்கூறுவது சரியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.