அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகள், அங்கு எத்தனை நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற காலவரையறை தமது ஆட்சியில் நிர்ணயம் செய்யப்படாது என லேபர் கட்சி தலைவர் Bill Shorten கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களில் தடுத்து வைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது.
மேலும் அங்கு கொண்டு செல்லக் கூடிய அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் உள்ளனர்.
ஆக குறித்த அகதிகளை எங்கு குடியமர்த்துவது? சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதா? அல்லது அவுஸ்திரேலியாவுக்குள் உள்வாங்குவதா என்ற குழப்ப நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு எந்த முடிவையும் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ளவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்துக்கு தற்போது கிடையாது.
இந்தநிலையில் இந்த காலப்பகுதியை 3 மாதமாக வரையறுக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட அகதிகள் தொடர்பில் ஒரு முடிவுக்கு குடிவரவு திணைக்களம் வரவேண்டுமென்று லேபர் கட்சி தனது ஜூலை மாத தேசிய மாநாட்டில் விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஒருவர் இத்தனை நாட்கள் தான் தடுத்து வைக்கப்பட முடியும் என்ற காலக்கெடு எதனையும் தாம் விதிக்கப்போவதில்லை என Bill Shorten கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.