தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடியாக வலம் வந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகை ஒரு காலத்தில் கலக்கிய நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாக உருவாக இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த சவுந்தர்யா எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்கு வந்தார்.
1993-ல் கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கமல்ஹாசனுடன் காதலா காதலா படத்திலும், விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தங்கம் படங்களிலும் நடித்தார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் உச்சத்தில் இருந்தார்.
தெலுங்கு பட உலகினர் இவரை அடுத்த சாவித்திரி என்றே அழைத்தனர். 2004-ல் பெங்களூரு அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது விமான விபத்தில் பலியானார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக பி.வாசு இயக்கிய ஆப்தமித்ரா கன்னட படத்தில் நடித்து இருந்தார். இந்த படம்தான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி என்ற பெயரில் வந்து வசூல் அள்ளியது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கில் படமாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக பிரபல தயாரிப்பாளர் ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இது உருவாகிறது. சவுந்தர்யா வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.