என்னுடைய தலையீட்டால் கீத் உயிர் தப்பினார்! – சபாநாயகர் கரு ஜயசூரிய

தன்னுடைய தலையீட்டினால், கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நோயர்  காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கீத் நோயர்  கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் அளிக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடமும்  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும் எனவும், இந்த கடத்தல் தொடர்பில் கரு ஜயசூரிய எவ்வாறு அறிந்துகொண்டார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சராக இருந்த கரு ஜயசூரிய, கீத் நோயர் கடத்தப்பட்டமை தொடர்பாக, அப்போதைய ஜனாதிபதியாக  இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.