மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு செல்ல புதிய அரசு தடை விதித்துள்ளது.
மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார். தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சி தலைவர் பதவியையும் நஜிப் ரசாக் ராஜினாமா செய்தார்.
தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியானது.
அதற்கேற்ப, நஜிப் ரசாக் ரோஸ்மா மன்சூர் தனி விமானம் மூலம் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு இன்று செல்ல திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து. நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை இன்று தடை விதித்துள்ளது.