தமிழர்களின் உரிமைகளை எவரும் புதைக்க முடியாது!

தமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை எவரும் புதைக்க முடியாது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரிக்கப்படாத நாட்டுக்குள், தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு,கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை குறித்து நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடு எதிர்கொள்ளும் பாரிய சிக்கல்களில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பது முக்கிய விடயமாகும். அதிகரித்துள்ள ஊழல் மோசடிகள் இந்த நிலைமைக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையில் அமைகின்றன. வடக்கு, கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்படும்வரை நாட்டுக்கு மீட்சி இருக்காது. நாட்டின் மீது கொண்டிருக்கம் அக்கறை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் இதுபற்றிய கருத்துக்களை முன்வைப்பது அவசியமானதாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.

எனினும், தமது அரசியல் நிலைப்புக்காக வடக்கு, கிழக்குப் பிரச்சினை தொடரவேண்டும் என சிலர் விரும்புகின்றனர். பிரிக்கப்படாத நாட்டுக்குள், பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள், சகலரும் சமவுரிமையுடன் வாழும் நாட்டுக்குள் வடக்கு, கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் ஊடாகவே இதனைச் செய்ய முடியும். இவ்வாறான நிலையிலேயே நாம் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையானது 2015ஆம் ஆண்டு 8ஆவது பாராளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து ஆற்றிய உரையின் தொடர்ச்சியானது எனக் கூறியிருந்தார். வடக்கு, கிழக்குப் பிரச்சினை முக்கியமான விடயம் என்பதை ஜனாதிபதி அடையாளம் கண்டு தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, சகல தரப்பினரினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு சபை உருவாக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய அரசியலமைப்பு சபையாக பாராளுமன்றம் மாற்றப்பட்டு, வழிநடத்தல் குழு மற்றும் உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு தொடர்பில் பொது மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. எனினும், துரதிஷ்டவசமாக கடந்த சில மாதங்களாக இந்த செயற்பாடுகள் தொடரப்படவில்லை. குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அரசாங்கத்தின் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியமை உள்ளிட்ட அரசியல் மாற்றங்களால் இந்த செயற்பாடுகள் தொடரப்படவில்லை.

எனினும், அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு தொடரப்பட வேண்டியது அவசியமாகும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் 2015 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என சம்பந்தன் தெரிவித்தார்.