புதிதாக குடியேறியவர்கள் அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

அவுஸ்திரேலியாவின் 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison 08 ஆம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின் deficit- துண்டுவிழும் தொகை அல்லது பற்றாக்குறை 18.2 பில்லியன் டொலர்களாக உள்ளது.

மேலும் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2.2 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

தற்போது 2 வருடங்கள் நாட்டில் வாழ்ந்திருந்தால் அரச கொடுப்பனவுகளுக்குத் தகுதிபெறுவர் என உள்ள சட்டத்தை மாற்றி 3 ஆண்டுகளாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற ஒப்புதலுக்காக உள்ளது.

இந்த நிலையில் இதனை 4 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேறியவர்கள் வேலைதேடுவதற்கு உதவும் சென்டர்லிங்கின் Jobactive சேவையைப் பெறுவதற்கு 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இதுவரை 3 மாதங்கள் வரை மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவொரு புறம் இருக்க வெற்றியாளர்களாக வயது முதிர்ந்த அவுஸ்திரேலியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 4 ஆண்டுகளில் மேலதிகமாக 14 ஆயிரம் home care support packages உருவாக்கப்படுகிறது. இதற்கென 1.6 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் அனைவரும் இனி Pension Loans Scheme-க்குத் தகுதிபெறுவர்.

இதன்மூலம் தம்பதியர்கள் தமது ஓய்வூதிய வருமானத்தை 17,800 டொலர்களால் அதிகரிக்க முடியும்.

இவ்வாறு வருமானம் அதிகரிப்பதால் அவர்கள் சாதாரணமாகப் பெறும் ஓய்வூதியத்தொகை பாதிக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.