இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படக் கூடியது. இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்வதை போன்ற ஆக்ரோஷம் அப்போட்டித் தொடரில் இருக்கும்.
ஒரு ஆண்டு இங்கிலாந்திலும் மற்றொரு ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடர் நடப்பது வழக்கம்.
முதல் டெஸ்ட் போட்டி
இவ்வாண்டுக்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் நகரில் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
வழக்கில் சிக்கிய வீரர்
இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப்பில் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீது வழக்கு நிலுவையிலுள்ளதால் ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்த வாரம் நடைபெறும் போலீஸ் விசாரணையில் அவர் விடுவிக்கப்பட்டால், ஆஷஸ் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கலாம். ஆஸி. வீரர்கள் தயார் இந்த நிலையில் ஆஸி. அதிரடி வீரர் டேவிட் வார்னர் மனைவி, கேன்டிஸ் அளித்த பேட்டியொன்றில், “ஆஸ்திரேலிய வீரர்கள், பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஆடவே விரும்புவார்கள் என்பதை அறிந்துள்ளேன். ஏனெனில் பெஸ்ட் அணியுடன் மோதுவதே ஆஸி.க்கு பிடிக்கும். ஆனால், பென் ஸ்டோக்ஸ் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
வெறுக்கத்தக்க காணொளி
அந்த காணொளி பதிவை (நைட் கிளப் தகராறு) பார்த்தேன். அது வெறுக்கத்தக்கதாக உள்ளது. உண்மையாகவே அது மிகவும் மோசமான செயல். இவ்வாறு கேன்டிஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து ரசிகர்களோ, அந்த சம்பவத்தின்போது, பென் ஸ்டோக்ஸ் ஒரு ஓரினச்சேர்க்கை ஜோடியை காப்பாற்றி ஹீரோவாக மிளிர்ந்ததாக புகழாரம் சூட்டி வருகிறார்கள். ஆஷஸ் தொடரின் வெப்பம், கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் வரை பரவிவிட்டதை இந்த பேட்டி உணர்த்தியுள்ளது