ஒன்பிளஸ் 5T: வெளியீட்டு திகதி விலை மற்றும் முழு தகவல்கள்

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சார்ந்த புது தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் சார்பில் எவ்வித தகவலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. விளம்பர படங்கள், வலைத்தள பட்டியல் என சீன வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 5T தோற்றம், சிறப்பம்சங்கள், விலை  மற்றும் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 18:9 ஆப்கெட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்ற டிஸ்ப்ளே ஹானர் 9i, எல்ஜி V30, சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கிரீனில் ஃபுல் எச்டி + 1080×2160 ரெசல்யூஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டிஸ்ப்ளேவுடன் இதன் கேமரா அம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அன்டுடு தளத்தில் வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 20 எம்பி + 16 எம்பி பிரைமரி கமரா வழங்கப்பட்டது.

பெரிய திரை மற்றும் அதிக திறன் கொண்ட கேமராக்கள் வழங்கப்படும் பட்சத்தில் இதன் பேட்டரியும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போமார்ட்டில் வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 3450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 3300 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. வடிவமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒன்பிளஸ் சார்பில் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஒன்பிளஸ் தளத்தில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது. இதன் விலை 549 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,700 என ஒப்போமார்ட் தளத்தில் வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கிஸ்சைனா தளத்தில் வெளியான விளம்பரத்தில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் நவம்பர் 16-ம் திகதி முதல் விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதி வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.

ஒன்பிளஸ் 5T சார்ந்து வெவ்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.