இணைய வசதி இன்னும் எட்டாத பகுதிகளுக்கும், அந்த வசதியைத் தரும் நோக்கத்தில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ துவங்கியது தான், ‘புராஜக்ட் லுான்’ என்ற திட்டம்.
இதுவரை, சோதனை அளவிலான திட்டமாகவே இது இருந்தது. ஆனால், அண்மையில் இதை ‘லுான் இங்க்’ என்ற தனி நிறுவனமாக பதிவு செய்திருக்கிறது கூகுள். ஆனால், இது குறித்து, கூகுள், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ராட்சத பலுான்களை அதி உயரத்தில் மிதக்க வைத்து, அதிலிருந்து இணைய சமிக்ஞைகளை, பூமியில் இணையம் எட்டாத பகுதிகளுக்கு வழங்குவது தான், லுான் இங்கின் வேலை.
அண்மையில் போர்ட்டோ ரிக்கோ தீவில், வெள்ளத்தால் செயலிழந்த அலைபேசி கோபுரங்களுக்கு மாற்று ஏற்பாடாக, லுானின் பலுான்களை மிதக்க விட கூகுள் முன்வந்துள்ளது. ஏற்
கனவே கூகுள், பல ஆண்டுகளாக தன் தானோட்டி கார்கள் பிரிவையும் இப்படித்தான் ஒரு உட்பிரிவுவாக வைத்து இருந்தது.
ஆனால், அதன் தொழில் நுட்பத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்ததும், ‘வேமோ’ என்ற தனி நிறுவனமாக அதை அறிவித்தது. எனவே, லுான் இங்க் பிரிவும், வளரும் நாடுகளில் இணையத்தைப் பரப்பும் தனி நிறுவனமாக விரைவில் அறிவிக்கப்படலாம்.