‘ரோபோ’ தொழில்நுட்பத்தில் யார் கில்லாடி என்பதை காட்டத் தயாரா என்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ரோபோ தயாரிப்பாளர்கள், ஜப்பானுக்கு சவால் விடுத்தனர். ஜப்பான் ரோபோ தயாரிப்பாளர்களும் அதை ஏற்றனர். அண்மையில், ஜப்பானில், ஒரு பழைய தொழிற்சாலை மைதானத்தில், அந்த வரலாற்று சிறப்புமிக்க ரோபோ சண்டை நடந்தது.
அமெரிக்காவின், ‘மெகாபாட்ஸ்’ நிறுவனத்தின், ‘ஈகிள் பிரைம்’ என்ற, 12 டன் எடையும், 16 அடி உயரமும் கொண்ட ரோபோ களமிறங்கியது. ஜப்பானின், ‘சூய்டோபாஷி’ ரோபோ நிறுவனத்தின், ‘குராடா’ என்ற, 6.5 டன் எடையும், 13 அடி உயரமும் கொண்ட ரோபோ, போட்டியில் கலந்து கொண்டது.
இரண்டையும் வெளியிலிருந்து கம்பியில்லா முறை மூலம் வல்லுனர்கள் இயக்கினர்.
முதல் சுற்றில், ஜப்பானின் குராடா ரோபோ விட்ட ஒரே குத்தில், அமெரிக்காவின் ஈகிள் பிரைம் ரோபோ விழுந்துவிட்டது. ஆனால், பின்னர் நடந்த இறுதிச் சுற்றில், அமெரிக்காவின் ஈகிள் பிரைம் திறமையாக சண்டையிட்டு வெற்றி பெற்றது. இந்த ரோபோ சண்டையை, ‘ட்விட்ச்’ என்ற இணையதளம், ‘ஸ்ட்ரீமிங்’ முறையில் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது.
இனி, ஆண்டுதோறும் சர்வதேச ரோபோ யுத்தப் போட்டியை நடத்தலாமா என, ரோபோ வல்லுனர்கள் ஆலோசித்து வருகின்றனர்.