உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டுடி மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின்கடவுச்சீட்டுக்கள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்தகடவுச்சீட்டுக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டு மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அதற்கு அடுத்த இடத்தில் 158 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 154 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. இந்திய கடவுச்சீட்டு 51 புள்ளிகளுடன் 75-வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது. அந்த நாட்டின் குடிமக்களை விசா இன்றி 22 நாடுகள் மட்டுமே அனுமதிக்கின்றன. அதற்கு முந்தைய இடத்தில் ஈராக் (26), பாகிஸ்தான்(26), சிரியா (29) உள்ளன.
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்கள் வரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-
159 – சிங்கப்பூர்
158 – ஜெர்மனி
157 – சுவீடன், தென்கொரியா.
156 – பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.நார்வே, ஜப்பான்
155 – லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்சுக்கல்,
154 – மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா,
153 – கிரீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
152 – மால்டா, ஐஸ்லாந்து, செக் குடியரசு,
150 – ஹங்கேரி.
149 – சுலோவேனியா, சுலோவாக்கியா, போலந்து, லுதுவேனியா, லாத்வியா.
இதுகுறித்து ஆர்டான் கேபிட்டல் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறும்போது, ‘முதல் முறையாக ஆசிய நாடு ஒன்று (சிங்கப்பூர்), சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இது அந்நாட்டின் தூதரக உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு சான்றாகும்.
இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் விசா கெடுபிடி காட்டியதே காரணம் என கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal