சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது.

மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து மனுமீதான விசாரணையை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

இந்ந மனுவை, அவர் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தியே, அவர் இந்த மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்று குறிப்பிட்டுள்ள, முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என்.சில்வா, அந்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் கோரியிருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் நேற்று (09) ஆராயப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதிசொலிஸிட்டர் ஜெனரல், தன்னுடைய கடுமையான எதிர்ப்பை முன்வைத்தார். அதனையடுத்தே, அந்த மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனெக அலுவிஹார மற்றும் நளின் பெரேரா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே, பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் மனுவுக்கு எதிராக, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் ஜெனரல், நீதியரசர் குழாமின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அதனையடுத்து, அவ்விரு மனுக்களும், நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டன.

இவ்விரு மனுக்களும், சட்டத்தரணி உனவட்டுன, கே.அருண லக்சிறி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ராஜகிரிய மொரகஸ்முல்லவை வசிப்பிடமாகக் கொண்ட ராஜித கொடிதுவக்கு ஆகியோரால், தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரால் கடந்த 22ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்காக, முன்வைக்கப்பட்ட திருத்தங்களில், இரண்டாவது திருத்தம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. முதலாவது திருத்தம் சேர்க்கப்படவில்லை என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அவ்வாறு. நாடாளுமன்றத்தில், கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை, இரத்துச்செய்யுமாறே அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது,

மனுவில் சட்டமா அதிபர், சபாநாயகர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தில், மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் உறுதிப்படுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.