புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான ரஜீவ் ராஜேந்திரன் (வயது-32) என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை குறித்து கருத்துத்தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ள சகோதரன் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைத்தானே பாதிப்பிற்குள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தபோதிலும் இவ்வாறான துன்பகரமான முடிவை எடுத்துள்ளார் என்றால் புகலிடம் தேடிச்செல்வோர் தடுத்து வைக்கப்ட்டிருக்கும் குறித்த தடுப்பு முகாம் நிலமையினை உணரக்கூடியதாக உள்ளது.

சர்வதேச நாடுகளின் பிராந்திய நலன்களுக்கு உகந்ததாக விளங்கிவரும் இன்றைய நல்லாட்சி அரசின் காலத்திலும் தமிழர் தாயகத்தில் பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது. தமிழர்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய ஏதுநிலை இன்னும் இங்கு ஏற்படாதவிடத்து அரசியல் புகலிடம் தேடி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடையும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்புடன் கூடிய கௌரவமான வாழ்வு தேடியே பேராபத்து நிறைந்த கடற்பயணத்தை மேற்கொண்டு மரணத்துடன் போராடி அவுஸ்ரேலிய மண்ணில் காலடியெடுத்து வைக்கும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து வதைத்து வருவதானது மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்ததற்கு ஒப்பான செயற்பாடாகவே அமைந்துள்ளது.

மனுஸ் தீவு தடுப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை ஆறுபேர் இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளமை, அத்தடுப்பு முகாம் வாழ்வின் கொடூரத்தினை வெளிப்படுத்தியுள்ளது. அதனை உறுதி செய்வதாகவே ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள கண்டனம் அமைந்துள்ளது.

தற்கொலை செய்து உயிரிழந்துள்ளவரது உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக 9 ஆயிரம் டொலர்களைத் தரவேண்டுமென இலங்கையிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளமை இவற்றையெல்லாம்விட கொடுமையான விடயமாக அமைந்துள்ளது.

ரஜீவ் ராஜேந்திரனது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரது மனதை மேலும் ரணப்படுத்தாது அவரது உடலை கொண்டுவந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அமைச்சர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவிகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை அகதிகளாக தஞ்சம்கோரி அங்கு வரும் ஈழத்தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்கான சூழமைவை ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும். அதன் மூலமே இவ்வாறான அவலச் சாவுகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அனந்தி சசிதரன் அவர்கள் கூறியுள்ளார்.