டுவிட்டரில் இனி 280 எழுத்துக்கள் அடிக்கலாம்!

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டுவிட்டர் அறிவித்துள்ளது. இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.

இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும்.

கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டுவிட்டர் குழுவால் சோதனை அடிப்படையில் 280 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் மேலும் எழுத்துக்களின் எண்ணிக்கையை முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று ஜப்பான், சீனா மற்றும் கொரிய மொழிகளிலும் பழைய எழுத்து முறை வரைமுறைகளை மாற்றி அமைக்க உள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.