அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் பதவியிலிருந்து மைக் டன்கிரீட் நீக்கம்

அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா தலைவர் மைக் டன்கிரீட், சக அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், திடீரென அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் மீடியா துறை தலைவராக கடந்த 1999-ம் ஆண்ட் முதல் மைக் டன்கிரீட் பதவி வகித்து வந்தார். அவர் மீது கடந்த ஆண்டு அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் போனில் தன்னை மிரட்டியதாக புகார் அளித்தார்.

அந்த புகாரில் மைக் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக தன்னுடைய மரியாதையை சீர்குலைத்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதே போன்று கமிட்டியின் முன்னாள் உறுப்பினர்களும் மைக் மீது புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து சுயாதீன விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. ஆனால், மைக் அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த புகாரை அடுத்து மைக் தனது தவறை ஒப்புக்கொண்டார். மேலும் ஃபியோனா டீ ஜாங்கிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர் பதவியிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தற்காலிகமாக விலக்கப்பட்டார்.

குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், ஒலிம்பிக் கமிட்டியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைக் டன்கிரீட் தலைவர் பதவியிலிருந்து நேற்று நீக்கப்பட்டார். அவர் 18 ஆண்டுகளாக அவுஸ்ரேலியா ஒலிம்பிக் கமிட்டியில் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.