அவுஸ்திரேலியா- கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது!

பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பை அவுஸ்திரேலியா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டமா அதிபர் ஜோர்ஜ் பிரான்டிஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையை தொடர்ந்து கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா , பசுபிக்கில் இயங்கும் இரண்டு அமைப்புகளை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்காசியாவிற்கான இஸ்லாமிய தேசம் அமைப்பு ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த தடை மூலம் குறிப்பிட்ட அமைப்பின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அந்த அமைப்பிற்கு உதவிகளை வழங்குவதும் குற்றமாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.