இந்தியா-அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!

இந்தியா- அவுஸ்ரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னையில் நடைபெறுகிறது.

வங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி முடிவு ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில் போட்டி அட்டவணை விவரம் இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

எஞ்சிய ஒரு நாள் போட்டிகள் கொல்கத்தா (செப்.21), இந்தூர் (செப்.24), பெங்களூரு (செப்.28), நாக்பூர் (அக்டோபர் 1) ஆகிய இடங்களில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே ராஞ்சி (அக்.7), கவுகாத்தி (அக்.10), ஐதராபாத் (அக்.13) ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி வருகிற 8 மற்றும் 9-ந்திகதிகளில் இரு பிரிவாக சென்னையை வந்தடைகிறார்கள். ஒரு நாள் தொடருக்கு முன்பாக பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28-ந்திகதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இந்த விதிமுறைகள் இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்கு கிடையாது. ஏனெனில் இந்த போட்டித் தொடர் தொடங்கி பாதியில் தான் அதை கொண்டு வர முடியும். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படக்கூடும். இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள விதிகள்படியே இந்தியா- அவுஸ்ரேலியா போட்டிகளை நடத்த ஐ.சி.சி. அனுமதித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பேட்டுகளின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள், களத்தில் வன்முறை நோக்குடன் மிக மோசமாக நடந்து கொள்ளும் வீரரை கால்பந்து பாணியில் வெளியேற்றுவது, டெஸ்ட் இன்னிங்சில் 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கும் முறையை ரத்து செய்வது, ரன் எடுக்க ஓடுகையில், கிரீசுக்குள் நுழைந்தாலும்கூட ஸ்டம்பு தாக்கப்படும் சமயத்தில் வீரரின் பேட்டோ அல்லது கால்களோ அந்தரத்தில் இருந்தால் ரன்-அவுட் வழங்கும் முந்தைய முறையை தளர்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது உள்ளிட்டவை புதிய விதிகளில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

செப்டம்பர் 28-ந்திகதி தொடங்கும் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்-இலங்கை ஆகிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படும். இந்தியாவை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து புதிய விதிமுறைக்குட்பட்டு விளையாடும்.