அவுஸ்ரேலியா – வங்காளதேசம் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்!

அவுஸ்ரேலியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இந்த டெஸ்டிலும் சுழற்பந்து வீச்சின் தாக்கத்தை தாக்குப்பிடித்தால் மட்டுமே அவுஸ்ரேலிய அணியால் எழுச்சி பெற முடியும். ஆனால் உள்ளூரில் நிலவும் சாதகமான சூழலில் வங்காளதேசம் மறுபடியும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்டிலும் ஆஸ்ரேலியா தோல்வியை தழுவினால், தரவரிசையில் முதல்முறையாக 6-வது இடத்துக்கு தள்ளப்படும்.

போட்டி குறித்து வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடியில் இருப்பதை அறிவோம். வழக்கமாக முந்தைய நாளில் ஆடும் லெவன் அணியை அறிவிக்கும் அவுஸ்ரேலியா இந்த போட்டிக்கான லெவன் அணியை அறிவிக்கவில்லை. சரிவில் இருந்து மீண்டு வரக்கூடிய திறமை அவர்களுக்கு உண்டு.

அதே சமயம் எங்கள் வீரர்கள் புத்துணர்ச்சியுடனும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையிலும் உள்ளனர். நாங்கள் சரியாக செயல்பட்டால் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வரும்’ என்றார்.