அவுஸ்ரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்

மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள  அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர்  வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன

அது பழிவாங்கும் தாக்குதல் போன்று காணப்பட்டது  எனவும் அவர்கள் அந்த அகதியை கொல்ல முயற்சித்தனர் எனவும்  சம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு அகதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள இனந்தெரியாத நபர்கள் அவரிடமிருந்து பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் காரணமாக தங்களை மனஸ்தீவு முகாமிலிருந்து தொலைதூரத்தில் உள்ள முகாமிற்கு மாற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சியை அகதிகள் கடுமையாக எதிர்க்ககூடும் என அகதிகளின் நலன் சார்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.