‘விக்ரம் வேதா’ கதையை கூறிய விதத்தில் புதுமை: விஜய் சேதுபதி

போலீஸ் – ரவுடி கதை தான். புதிதாக எதுவுமே இல்லை தான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும் என்று ‘விக்ரம் வேதா’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறினார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதாவது:

“நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பு தளம் தான். எனக்கு இப்படத்தில் பங்குள்ளது என நினைத்து முழுமையாக பணியாற்றியுள்ளேன். 2014-ம் ஆண்டு இப்படத்தின் கதையைக் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும் போது பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

இந்தப் படத்தின் மொத்த கனவையும் நனவாக்கியது ஷசிகாந்த் சார் தான். ஏனென்றால் அவருடைய ரசனை மிகவும் பெரியது. ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரசனை மிகவும் முக்கியம். அது ஷசிகாந்திடம் நிறைய உள்ளது. வரலெட்சுமி, கதிர் மற்றும் விவேக் உள்ளிட்ட யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.

மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அது தான் எங்கள் இருவரையும் வைத்து முதலில் படமாக்கப்பட்டது. பெரிய படங்கள், பெரிய நடிகர்களோடு நடித்தவர் மாதவன். அவரோடு நடிக்கும் போது எப்படியிருக்கும், எதிர்வினை எப்படியிருக்கும், முதல் தடவை நம்மைக் காணும் போது என்ன பேச வேண்டும் என நிறைய யோசித்து வைத்திருந்தேன். அவர் வந்தவுடனே சாதாரணமாக அந்த இடம் மாறிவிட்டது. பழகுவதற்கு இனிமையானவர். ஒரு காட்சியைப் பற்றி எளிதாக அவருடன் விவாதிக்க முடிகிறது. நீண்ட நாள் நண்பர்கள் இணைந்து பணியாற்றினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவரோடு நடித்தது இருந்தது.

இந்தக் கதையில் கதிரும் ஒரு நாயகன் தான். சில சமயங்களில் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவு மட்டுமே, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். கதிருடன் பழகியதால் சொல்கிறேன், அவனிடம் அவனது வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சி இருக்கிறது. நாம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

இப்படத்தின் டைனோசர் வினோத் சார் தான். அவருடைய வேலை சத்தமாக இருக்கும். ஆனால், அவரோ அமைதியாக இருப்பார். அவர் ஒரு மகா கலைஞர். அவருடைய ஒளிப்பதிவில் இதுவரை ஒருமுறை கூட மானிட்டரைப் பார்த்ததில்லை. அவரோடு பணியாற்றியதே சந்தோஷம் தான்.

இப்படத்தின் ட்ரெய்லரைக் காணும் போது நிறைய கொலைகள் எல்லாம் இருப்பது போல தோன்றும். ஆனால், அதெல்லாம் தாண்டி இது ஒரு லாலாலா படம். அவ்வளவு தூரம் வாசித்திருக்கிறோம். நிறைய எமோஷன் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புதமான படம். இப்படத்தின் எமோஷன் காட்சிகள் மின்னல் தாக்குவதைப் போன்று உங்களைத் தாக்கும்.

விக்ரமாதித்தான் – வேதாளம் படத்தின் கதைக்களத்தை எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தார்கள் என இக்கதையைக் கேட்டவுடன் நினைத்தேன். அதனை மிகவும் சுவாரசியமாக இப்படத்தின் கதைக்குள் திரைக்கதையாக வடிவமைத்திருந்தார்கள். எனது கதாபாத்திரத்தின்படி சொல்கிறேன். ஒரு வாழ்க்கையை படித்த ஒருவன் பேசும் தத்துவங்கள், வாழ்க்கையை அவன் எப்படி புரிந்து கொண்டுள்ளான், வாழ்க்கையின் மீது அவனுடைய பார்வை என்ன என பல விஷயங்களைக் கூறியுள்ளோம். நிறைய ஆழமான வசனங்கள் உள்ளன.

இப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியுமே இயக்குநர் புஷ்கர் – காயத்ரி இருவரால் உருவாக்கப்பட்டவை. நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ‘விக்ரம் வேதா’ படம் மட்டும் எனக்கு பதட்டமாக உள்ளது. இப்படத்தை மக்களோடு திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன். போலீஸ் – ரவுடி கதை தான். புதிதாக எதுவுமே இல்லை தான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும். இப்படம் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் பார்க்கச் சொல்கிறது” என்று பேசினார் விஜய் சேதுபதி.