அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய அமைப்பு!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்குமிடையில், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை முகாமை செய்வதற்காக, புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்பட்டுள்ள அமைப்பே, வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள், அனுசரணையாளர்களை முகாமை செய்தல், ஊடகங்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் அணுக்கத்தை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கான நிதியளிப்பும் பெறப்படவுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, விரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை, அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்துவதோடு, அதற்காக வருடாந்தம், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கு நிதியளித்து வருகிறது. ஆனால், அச்சங்கத்துக்கு நிதியளிப்பதை நிறுத்தப் போவதான சமிக்ஞைகளை, கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து வீரர்களையும் புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில், வீரர்களின் சங்கம் காணப்படுகிறது.

வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்குமிடையிலான ஒப்பந்தம், காலாவதியாகுவதற்குள், இரு தரப்புக்குமிடையில் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டால், பல்வேறு வகையான உரிமைகளை வழங்குதல் சம்பந்தமான பணியில் மாத்திரம் புதிய அமைப்புச் செயற்படும் என்பதோடு, ஏனைய அறிவுசார் சொத்துரிமைகள், கிரிக்கெட் சபையிடம் மீண்டும் வழங்கப்படும்.

வீரர்களின் அறிவுசார் சொத்துரிமை என்பதற்கும் வீரரின் பெயர், குரல், கையெழுத்து, வணிகக் குறியீடு, புகைப்படம், அவரது திறமை வெளிப்பாடுகள் ஆகியன உள்ளடங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதற்கு, வெளியார் பணம் செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.