கருந்துளையை படமெடுத்ததொலைநோக்கிகள்

முதன் முதலாக கருந்துளையை படம்பிடித்த விஞ்ஞானிகள் அண்டவெளியில் கருந்துளை இருக்கிறது என்பவர்கள் உண்டு இல்லவே இல்லை என்பவர்களும் உண்டு. ஆனால், ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை பல நாடுகளில் அமைந்துள்ள, ரேடியோ தொலைநோக்கிகளை கூட்டாகப் பயன்படுத்தி, இராப் பகலாக கவனித்து, கருந்துளையை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.

இதுவரை ஓவியர்கள் கற்பனையாக வரைந்த கருந்துளைகளைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வரலாற்றிலேயே கருந்துளை நிஜமாகவே படம்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. நம் பூமி அமைந்துள்ள நட்சத்திரக்கூட்டமான பால் வீதி மற்றும் அருகாமையில் உள்ள நட்சத்திரக் கூட்டமான எம்.87 ஆகியவற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள இரு கருந்துளைகளை தொலைநோக்கிகள் கவனித்து தகவல் சேகரித்தன. அப்படி சேகரித்த தகவல்கள் மட்டும், 500 டெராபைட் அளவுக்கு இருந்தன.

அவற்றை, 1,024 கணினி வன் தட்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர். இனி, அத்தகவல்களை அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளில் உள்ள அதிதிறன் கணினிகள் மூலம் அலசி, கருந்துளைகளின் படத்தை துல்லியமாக சேர்த்து, ‘தைக்க’ வேண்டும். இதற்கு சில மாதங்கள் பிடிக்கும் என்பதால், 2018 வாக்கில் தான் கருந்துளைகளின் முதல் டிஜிட்டல் படம் கிடைக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஹெய்னோ பால்கேயின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

பிரபஞ்சத்தில் கருந்துளைகள் இருப்பதாகவும், அவை நேராகப் பயணிக்கும் ஒளிக்கதிரைக்கூட வளைக்கும் அளவுக்கு மிதமிஞ்சிய ஈர்ப்பு சக்தி உள்ளவை என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்தான் கணித்தார். அவரது கணிப்பு விரைவில் மெய்யாகும் என, ரேடியோ தொலை நோக்கிகள் மூலம் தகவல் சேகரித்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு உறுதியாக நம்புகிறது.

கருந்துளையின் புகைப்படம் கிடைத்தால், விண்வெளியின் பல புதிர்கள் விடுபடும் என்பதோடு, கிடைத்த தகவல்களை மேலும் ஆராய்வதன் மூலம், அடுத்த, 10 ஆண்டுகளில் பல புதுமைகள் நிகழ்த்தப்படும்.