ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும்

நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் சுமார் 120 நாடுகளில் வெளியிட எச்எம்டி குளோபல் திட்டமிட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த எச்எம்டி குளோபல் தற்சமயம் அவற்றை ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன் படி உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதும் இவற்றின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இவை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எச்எம்டி குளோபல் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களை 120 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கியா 3 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் எச்டி 1280×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 2650 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.