விக்கிப்பீடியாவில் தமிழ் முன்னணியில் இருப்பது எப்படி?

துறை சார்ந்த நிபுணர்கள் முதல் மாணவர்கள், பொதுமக்கள் வரை தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தேடிப் பெற கூகுள் போன்ற தேடு பொறிகள் பெரும் உதவியாக உள்ளன. எனினும், பெரும்பாலான தகவல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் 68% உள்ளது. இந்நிலையில், பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் கிடைக்கச் செய்வதற்கான ஏராளமான தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அவ்வகையில், தமிழ் மொழி தகவல்களை இணையத்தில் இடம்பெறச் செய்வதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. தமிழ் விக்கிப்பீடியா 2003 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தன்னார்வமிக்க தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பால் இந்தக் கலைக்களஞ்சியத்தில் தமிழ்க் கட்டுரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது. விக்கிப்பீடியாவில் தற்போது 1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கட்டுரைகள் உள்ளன.

விக்கிப்பீடியாவில் இந்திய மொழிகளின் ஆளுமையை வளப்படுத்தும் நோக்கில் பல்வேறு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை நல்கும் கட்டுரையாளர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள் நடக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் 16-வது சர்வதேச மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து 13 பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டு பிரதிநிதிகளில் ஒருவரான ஏற்காடு இளங்கோ, “இத்தகைய சந்திப்புகளும் மாநாடுகளும் தமிழ் விக்கிப்பீடியாவில் மென்மேலும் எழுதத் தூண்டுகிறது” என்கிறார்.

தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவரான இளங்கோ, ஏற்காடு மலைப் பகுதிகளில் உள்ள தாவரங்களை அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, பெயரிட்டு, அவற்றின் புகைப்படங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பதிவேற்றிவருகிறார். தாவரங்கள் மட்டுமின்றி, விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள் எனக் கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். ஏற்காடு இளங்கோவின் படங்கள் சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளில் கட்டுரைகளை அதிகப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனமும் விக்கிமீடியா அறக்கட்டளையும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையத்தின் ஆதரவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய மொழிக் கட்டுரையாளர்களிடையே போட்டிகளை நடத்திவருகின்றன. ‘ப்ராஜெக்ட் டைகர்’ என்ற பெயரில் 2018-19-லும், ‘ப்ராஜெக்ட் டைகர் 2.0’ என்ற பெயரில் 2019-20-லும் இந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. மூன்று மாத காலம் நடைபெறும் இந்தப் போட்டியை தமிழில் ‘வேங்கைத் திட்டம்’ என்கிறார்கள்.

இந்திய மொழிகளில் அதிகம் தேடப்படும் தலைப்புகளை கூகுள் நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதேபோல், இந்திய மொழிகளில் எந்தெந்த தலைப்புகளில் இன்னும் அதிகம் தகவல் தேவைப்படுகிறதோ, அத்தகைய தலைப்புகளை மொழி சார்ந்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்தத் தலைப்புகளில் போட்டியாளர்கள் கட்டுரைகள் எழுதி சமர்ப்பிக்க வேண்டும். 2018-19-ல் நடைபெற்ற போட்டியில் 12 இந்திய மொழிகளில் மொத்தம் 4,466 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 220 பேர் போட்டியில் பங்கேற்றனர். அவற்றில் 1,320 கட்டுரைகளுடன் பஞ்சாபி மொழி முதலிடத்தைத் தட்டிச்சென்றது. 1,241 கட்டுரைகளுடன் வெற்றிக்கோட்டுக்கு மிக அருகே தமிழ் சென்றது. உருதில் 694 கட்டுரைகளும், வங்கத்தில் 379 கட்டுரைகளும், மலையாளத்தில் 251 கட்டுரைகளும், இந்தியில் 143 கட்டுரைகளும் எழுதப்பட்டன.

இந்நிலையில், ‘வேங்கைத் திட்டம் 2.0’ போட்டி அக்டோபர் 11, 2019 முதல் ஜனவரி 10, 2020 வரை நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு போட்டியில் 2,942 கட்டுரைகளுடன் தமிழ் மொழிக்கு முதலிடம் பெற்றது. பஞ்சாபி (குர்முகி) மொழியில் 1,747 கட்டுரைகள் எழுதப்பட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளில் ஒருவரான ராஜாராமன் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சிகளே இந்த வெற்றிக்குப் பிரதான காரணம். ‘நீச்சல்காரன்’ என்ற பெயரில் தமிழ் இணைய வாசகர்களிடம் பிரபலமானவர் ராஜாராமன். 2018-ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட ‘தமிழ் இணையப் பிழைதிருத்தி’யை உருவாக்கியவர் இவர். இரண்டாம் ஆண்டு வேங்கைத் திட்டத்துக்கு தமிழ் கட்டுரையாளர்களைத் தயார்படுத்தும் விதத்தில் சென்னை, மதுரையில் 3 பயிற்சி முகாம்களை இவரும், இவரது நண்பர்களும் நடத்தியுள்ளனர். ஏராளமான தமிழ் மொழி கட்டுரையாளர்களை ஒருங்கிணைத்து ஊக்குவிக்கும் விதத்தில் இவர்கள் செயல்பட்டது நல்ல பலனைத் தந்துள்ளது.

போட்டிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் மொழி வாரியாகச் சிறந்த பங்களிப்பாளர்கள் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியின் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மொழியின் பங்கேற்பாளர்கள் தங்கள் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் திறன் வளர்ப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்க் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெரிய அளவில் நிச்சயம் உதவும். எதிர்காலத்தில் விக்கிப்பீடியா போன்று தமிழுக்கென தனித்த இணையக் கலைக்களஞ்சியப் பக்கம் உருவாகும்போது விக்கிப்பீடியா பக்கத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை இடமாற்றம் செய்துகொள்ள எவ்விதத் தடையும் இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய தகவல் களஞ்சியப் பக்கத்தில் தமிழ் மொழியில் தகவல்களை அதிகரிப்பதோடு, மேலும் பல புதிய ஆர்வலர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த இந்தப் போட்டி பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.

– வி.தேவதாசன்,

தொடர்புக்கு: devadasan.v@hindutamil.co.inவி.