எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி

கப்டன் மஹேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு தான் எம்.எஸ்.தோனி மொத்தப்படமும். ஆனால், வாழும் கிரிக்கெட் சூறாவளியான தோனியின் வரலாற்றை எத்தனைக்கு எத்தனை சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் தரமுடியுமோ? அத்தனைக்கு அத்தனை பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே.

கதைப்படி, பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி, தன் திறமையால் எப்படியெல்லாம் போராட்ட சூழலான வாழ்க்கையில், குடும்பத்திற்காக இரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைத்த டிக்கெட் கலெக்டர் வேலையையும் பார்த்துக் கொண்டே, கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி, எப்படி இந்திய அணியில் இடம் பிடித்து, இந்திய அணியின் கேப்டனாகவும் ஆகி, உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தருகிறார்? எனும் கதையுடன், தோனியின் நிறைவேறாத முதல் காதலையும், நிறைவேறிய இரண்டாவது காதலையும் அழகாக கலந்துக் கட்டி அம்சமான திரைப்படமாக எம்.எஸ்.தோனியை தந்திருக்கிறார்கள்.

எம்எஸ்தோனி எனும் கேப்டன் மஹேந்திர சிங் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியாக நடிக்க வில்லை…. வாழ்ந்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில், அந்த் பஞ்சாப் ஜலந்தரில், 5வதாக இறங்க வேண்டிய ஆளான தோனி, கோச்சிடம் கேட்டு விட்டு, ஒப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கி, சக பேட்ஸ்மேனிடம், பந்தை அடிக்கிறதெல்லாம் நான் பார்த்துக்குறேன்…

நீ என்னை ரன் அவுட் ஆக்கம இரு… என்று சொல்லிவிட்டு நூறு பந்துக்கு இருநூற்று பதிமூன்று ரன் அடிக்கும் காட்சியில் தொடங்கி, இறுதியில் இந்தியாவுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் உலக கோப்பையை வாங்கி தருவது வரை சகலத்திலும் தோனியாகவே சக்கைப்போடு போட்டிருக்கிறார் சபாஷ்!

இவர் நடிக்கும் படக்காட்சிகளையும், தோனி நிஜத்தில் ஆடிய மேட்ச்களையும் அழகாக மேட்ச் செய்து, மெர்ஜ் செய்து இருக்கும் காட்சிகள் போதும் எம்எஸ்தோனி திரைப்படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூற.

தோனியின் காதல் மனைவி ஷாக்ஷியாக வரும் கையிரா அத்வானி, அசத்தல், அபாரம் என்றால் முதல் காதலி ப்ரியங்காவாக வந்து விபத்தில் அகால மரணமடையும் திஷா பட்டாணி, படம் முடிந்து வெளியில் வந்து வெகு நேரமான பின்பும் மனதை விட்டு அகல மறுக்கிறார். இருவரிடமும் அப்படி ஒரு நடிப்பு, ஈர்ப்பு. வாவ்.

தோனியின் பாசக்கார அக்காவாக வரும் மாஜி கதாநாயகி பூமிகா சாவ்லா, அப்பா அனுபம் கெர், நண்பர்கள் ஹென்றி தங்கரி, ராஜேஷ் சர்மா… உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். அதிலும், கெத்தான இரயில்வே ஆபிஸர் ஏ.கே.கங்கூலியாக வருபவர், தோனியை வளர்த்து விடும் இடங்களும், வித விதமாக பந்து போட்டு தோனிக்கு டெஸ்ட் வைக்கும் இடங்களும் ஹாஸ்யம்!

;இதுதானா அந்த பொன் நேரம். ;உன்னால… உன்னால் தான்… கொஞ்சம் உன் காதலால்.. பாடல்கள் அமல் மாலிக்கின் இசையில் சுப ராகம்.

சுதிர் பால்ஷனேயின் ஒளிப்பதிவு, வாழ்க்கை வரலாறு என்பதை எல்லாம் தாண்டி தோனி படத்தை காவியமாக காட்டும் ஓவியப்பதிவு.

தீபாஷிஷ் மிஷ்ராவின் சவுண்ட் எபெக்டும், திலிப் ஜாவின் கதை, திரைக்கதையும் படத்திற்கு பக்கா பலம். நீரஜ் பாண்டேவின் வசனம் மற்றும் இயக்கத்தில், நல்லா விளையாடுற பேட்ஸ்மேனுக்கு, தோனி, ஆரம்ப காலத்தில்…. சம்சா வாங்கி கொடுத்து ஹெலிகாப்டர் ஷாட் கற்றுக் கொள்ளும் இடம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், பீகாருடன் பஞ்சாப் மோதும் முதல் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கைப் பார்த்து தோனி, தவிர்த்து அவரது மொத்த டீமும் வாய் பிளக்கும் இடம், காட்சிபடுத்தப்பட்டுள்ள விதம். மற்றும், இப்பவே கடைசி சீட்… அடுத்த மேட்ச்ல இருக்கனா, இல்லையான்னுக் கூடத் தெரியலை.. என்றபடி, தன்னை யாரென்று தெரியாது, பிளைட்டில் அருகில் அமரும் பெண்ணுக்கு, அதே ப்ளைட்டில் முன் வரிசையில் இருக்கும் சச்சினின் கையெழுத்து வாங்கிக் கொடுத்து உருவாகும் தோனியின் முதல் காதல் காட்சி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேல், பாகிஸ்தான் பசங்களை எல்லாம் சப்போர்ட் பண்ணுவீங்க…. நம்ம ஊர் பையனுக்கு செய்ய மாட்டிங்க…. தோனி என்ன சச்சினா? சச்சின் யூஸ் பண்றாரே அந்த எம்ஆர்எப் பேட் எவ்வளவு இருக்கும்? எம்ஆர்எப் டயர் தயாரிக்கிறதோடு சரி… பேட் எல்லாம் தயாரிக்கிறதில்லை, நல்ல விளையாடுறவங்களுக்கு காசு கொடுத்து அவங்க பேட்ல ஸ்டிக்கர் ஒட்டிப்பாங்க..

நான், விளையாடாமலேயே தோத்து போயிட்டிருக்கேனோன்னு தோணுது…. லைப்லும் நீ ஒரு நேச்சர் ப்ளேயர்…. உன் பிளஸ் பாயிண்டே அதான்…. ;இவன் மட்டும் டீமுக்காக விளையாடுறான்… அவனுக்காக விளையாடுல…. , இரயில்வேயில ஸ்டாப்க்கு தர்ற குவார்ட்ரஸ விட கார்டன் தான் பெருசா இருக்கும்…
மேட்ச்ல சவுரவ் டிசர்ட் கழட்டி சுற்றியது… சரியா தவறா தெரியலை… நீடிபன்ஸிவா இருக்கிறதெல்லாம் உனக்கு சூட் ஆகலை.. வெறித்தனமா அடிப்பியே அது தான் நல்லாருக்கு… எப்பவும் அப்படியே அடி, சந்தோஷமா இரு.

ஒரு நல்ல பேட்ஸ்மேன் எதாவது ஒரு மேட்ச்ல ரன் எடுக்கலாம் , எடுக்காமலையும் போகலாம் , ஆனா நல்ல பீல்டர்…. எல்லாமேட்சிலயும் நல்லா பீல்டு பண்ணுவாங்க அதுதான் இளைஞர்கள் தேவை.. என்னும் டயலாக்குகளிலும், தோனியின் முதல் காதல் இழப்பு, மற்றும் இப்படக்காட்சிகளையும், தோனி நிஜத்தில் ஆடிய மேட்ச்களையும் அழகாக மேட்ச் செய்து, மெர்ஜ் செய்து….

கண்ணுக்கு விருந்தாக்கி இருக்கும் பளிச் காட்சிகளிலும், பன்ச்வசனங்களிலும் எல்லா தரப்பு ரசிகனையும் பெரிதாக இயக்குனர் ஈர்க்கிறார்.

ஆக மொத்தத்தில், ‛‛எம்எஸ் தோனி திரைப்படம், – நிச்சயம் எல்லா மொழியிலும் உலா வரும் ‛‛வெற்றி பவனி!