மன சுமையை குறைக்க உதவும் கருவி!

மனச் சுமை சார்ந்த உளவியல் மற்றும் உடலியல் சிக்கல்களுக்கு, பக்கவிளைவுகள் உள்ள மருந்து களுக்கு பதில் மாற்று சிகிச்சை முறைகள் சில வந்துள்ளன. அவற்றில், ‘நியூரோ பீட்பேக்’ இப்போது மீண்டும் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. ஆனால், மூளைக்கு உள் நடுப்பகுதியில் பாதாம் பருப்பு வடிவில் உள்ள, ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் தான் மனிதனின் நவரச உணர்வுகளும் உற்பத்தியாகின்றன. இந்தப் பகுதியின் செயல்பாட்டை வழக்கமான இ.இ.ஜி., கருவி மூலம் துல்லியமாக கண்காணிப்பது முடியாத காரியமாக கருதப்பட்டு வந்தது.

இதற்கு, மருத்துவர்கள் எப்.எம்.ஆர்.ஐ., எனப்படும் மின்காந்த ஸ்கேனிங் சாதனத்தை பயன்படுத்தினர். ஆனால், இதற்கு ஆகும் செலவு அதிகம். எப்.எம்.ஆர்.ஐ., ஸ்கேனர்கள் எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை. எனவே, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தல்மா ஹெண்ட்லரின் தலைமையிலான குழு, இதற்கு ஒரு மாற்று வழியை கண்டறிந்துள்ளது.

மருத்துவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் இ.இ.ஜி., சாதனத்தை பயன்படுத்தியே, அமிக்டாலாவின் செயல்பாட்டை இனி பதிவு செய்ய முடியும். “நாங்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய சாதனம், குறைந்த செலவில் இ.இ.ஜி.,யை பயன்படுத்தி, எவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் உடனுக்குடன் திரையில் அமிக்டாலாவின் செயல்பாட்டை காட்டிவிடும்,” என்கிறார் தல்மா.

ஹெண்ட்லரின் குழுவினர், மேலும், 80 பங்கேற்பாளர்களிடம், சில செயல்களை செய்யச் சொல்லி பரிசோதனைகள் செய்தனர். பங்கேற்பாளர்களின் அமிக்டாலாவில் உணர்வுகள் வெளிப்படும் விதத்தை பதிவு செய்தனர்.

இந்த புதிய கருவியை பயன்படுத்தும்போது, பங்கேற்பாளர்களால் அமிக்டாலாவின் இயக்கத்தை மட்டுப்படுத்தி, தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடிந்தது. இதனால், அவர்களது நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது.

டெல் அவிவ் குழுவினர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் மூலம், எவரும் தாங்களாகவே தங்கள் அமிக்டாலாவை நேரடியாக கண்காணித்து, உணர்வுகளை கட்டுப்படுத்தி, மனச்சுமை, பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து மீள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனச் சிதறல் குறைபாடு உள்ளவர்களுக்கு, இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட புதிய கருவி உதவும் என்பதோடு, மனச் சுமை சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை தர, இந்த கருவியை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர். இவர்களது ஆராய்ச்சி முடிவுகள், ‘பயாலஜிகல் சைக்கியாட்ரி’ இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.