வீழ்ச்சியடைகிறதா அவுஸ்ரேலிய டொலர்?

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த அவுஸ்ரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது.

பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண மாற்ற தொகையும் நேற்று முன்தினம் வீழ்ந்திருந்தாலும், நேற்றிரவு அமெரிக்க பணத்தைவிட மற்றைய பணமாற்ற விகிதங்கள் திடமாகியுள்ளன.

Consumer Price Index (CPI) என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்குக் கொடுக்கும் விலை அவுஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என தெரியவருகிறது.

இதேவேளை அவுஸ்ரேலிய மத்திய வங்கியின் வட்டி வீதம் இந்த ஆண்டு முடிவில் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதிகரித்துவரும் வீட்டு விலைகள் காரணமாக வட்டி விகிதத்தை அதிகரித்தால் அவுஸ்ரேலிய பொருளாதாரம் வீழ்ச்சியைக் காணும் எனவே, அது அதிகரிக்காது என்றும் பரவலான கருத்து காணப்படுகிறது

இதேவேளை வணிகங்களுக்கான வரி வீதத்தை அமெரிக்கா குறைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க பணத்தின் மதிப்பும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

ஆக இவை அனைத்தும் சேர்த்து அவுஸ்ரேலிய பணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மதிப்பு குறைந்து கொண்டு செல்கிறது என கூறப்படுகிறது.