கிராக் வைபை பிழை: பாதிப்பில் சிக்காமல் இருக்க டிப்ஸ்

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிழை வைபை மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதிக்கும் என தெரியவந்துள்ளது.

வைபை என்க்ரிப்ஷன் ப்ரோடோகால் WAP2 முறையில் பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைபை மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பிழை மூலம் வைபை நெட்வொர்க்கில் இணைந்திருப்போரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முடியும் என்பது தெரியவந்துள்ளது.

புதிய வைபை பிழை KRACK என அழைக்கப்படுகிறது. இந்த பிழையானது WAP2 ப்ரோடோகால் மீது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சேவைகள் மட்டுமின்றி அனைத்து வகையான நவீன வைபை நெட்வொர்க்களையும் இந்த பிழை பாதிக்கும் என மேத்தி வான்ஹோஃப் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

கிராக் பிழை என்றால் என்ன?

கிராக் (KRACK-Key Reinstallation AttaCK) பிழை உங்களது வைபை சாதனம் பாதுகாக்கப்பட்ட வைபை நெட்வொர்க்குடன் இணைய முயற்சிக்கும் நான்கு வழி ஹேன்ட்ஷேக் முறையின் மூன்றாவது வழிமுறையை குறிவைக்கும். மூன்றாவது வழிமுறையில் என்க்ரிப்ஷன் கீயினை பலமுறை அனுப்பமுடியும் என்பதால் ஹேக்கர்கள் இந்த வழிமுறை மூலம் இடைமறித்து தகவல்களை சேகரித்து கொள்கின்றனர்.

வைபை சேவையை எவ்வித சாதனத்தில் பயன்படுத்த முயற்சித்தாலும் கிராக் வைபை பிழையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனினும் சில சாதனங்கள் மற்ற சாதனங்களை விட அதிக பாதிப்பில் சிக்க வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

உங்கள் சாதனத்தின் வைபை பாதுகாப்பு என்க்ரிப்ஷன் மறிக்கப்பட்டால், உங்களது நெட்வொர்க் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களும் அபகரிக்க முடியும். குறிப்பாக கிரெடிட் கார்டு எண், பாஸ்வேர்டுகள், மின்னஞ்சல்கள், சாட் வரலாறு, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை உளவு பார்க்க முடியும்.

பிழையில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

கிராக் வைபை பிழையில் பாதிக்கப்படாமல் இருக்க உங்களது சாதனம் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என வான்ஹோஃப் தெரிவித்துள்ளார். உங்களது சாதனம் அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், மற்ற ஹார்டுவேருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதனால் வைபை பிழையில் இருந்து தப்பிக்க முடிந்தவரை வைபை இணைப்பை தவிர்த்து ஈத்தர்நெட் அல்லது மொபைல் டேட்டா பயன்படுத்துவது நல்லது.

இந்த பிழையில் வைபை நெட்வொர்க் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்யும் அனைத்து சாதனங்களும் பாதிக்கப்படலாம் என்ற வகையில், ஆண்ட்ராய்டு சாதனங்கள் அதிகப்படியான பாதிப்பை சந்திக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ஐ.ஓ.எஸ்., வாட்ச் ஓ.எஸ்., மேக் ஓ.எஸ். மற்றும் டி.வி. ஓ.எஸ். பீட்டா அப்டேட்களில் கிராக் வைபை பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சென்ட்ரல் சமீபத்தில் வெளியிட்ட அப்டேட் விண்டோஸ் 10 கணினிகளை கிராக் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் வெளியிட்ட அப்டேட்டின் போது கிராக் பிழையே கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.