இஸ்திரி போடும், ‘ரோபோ’

இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி ஈரத்துணியை கொடுத்தால், பக்காவாக, இஸ்திரி போட்டுத் தர, ஓர் இயந்திரம் வந்துவிட்டது.

பிரிட்டனில் விற்பனைக்கு வரவுள்ள, ‘எப்பி’ (Effie) என்ற இஸ்திரி போடும் ரோபோ, சட்டை, பேன்ட், காலுறை, போர்வை என, சகல துணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

அதுமட்டுமல்ல, பாலியஸ்டர், பருத்தி, பட்டு, விஸ்கோஸ், டெனிம் என, பல ரகத் துணிகளையும் உலர்த்தி, இஸ்திரி போடும் திறன் கொண்டது, ‘எப்பி’ ரோபோ. நெஞ்சளவுக்கு உயரமும், தட்டையான பெட்டி போலவும் உள்ள, இந்த இஸ்திரி ரோபோவின் ஒரு புறம், 12 துணிகளை தொங்கவிட்டால், மறுபுறம், மொடமொடப்புடன், இஸ்திரி போட்ட துணிகள் வந்து நிற்கின்றன.

ஒரு துணியை இஸ்திரி செய்ய, மூன்று நிமிடங்களே ஆகிறது. துணியின் சுருக்கங்களை நீக்க உதவும் நீராவிக்காக, இந்த இயந்திரத்திலுள்ள சிறு பெட்டியில், நீரை ஊற்ற வேண்டும். அவ்வளவு தான். வரும், 2018 மார்ச்சில், சந்தைக்கு வரவிருக்கும் இதன் விலை, 60 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என, தெரிகிறது.