அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து எளிய இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி  15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.

இதற்கிடையில், நேற்று போட்டி முடிந்த பிறகு அவுஸ்ரேலிய அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தோல்வி அடைந்ததால் விரக்தியில் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் அவுஸ்ரேலிய அணியினர் சென்ற பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

ஜன்னல் கண்னாடிகள் உடைந்த புகைப்படத்தை அவுஸ்ரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டை வார்னரும் ரீடுவிட் செய்துள்ளார். எனினும் இந்த தாக்குதல் குறித்து, பிசிசிஐ, ஐசிசி அல்லது அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.