கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவிக்கையில்,

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாள் வட்டுவாகல் மற்றும் வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 271.62 ஏக்கர் நிலப்பரப்பு காணி எடுத்தல் சட்டத்தின்கீழ், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலப்பரப்பானது, ஒரு பகிரங்கத் தேவைக்காக காணி எடுத்தல் சட்டத்தின் பிரகாரம் எடுத்துக்கொள்ளப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபோது பல்லாயிரக்கணக்கான போராளிகள் இப்பிரதேசத்திலேயே இராணுவத்தினரிடம் சரணடைந்தபோது காணாமலாக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இப்பிரதேசத்திலேயே சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரதும் உடல்கள் இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே இப்பிரதேசத்தை பொதுத் தேவைக்காக கையகப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.