பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்: நடிகர் விவேக்

பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும் என்று நடிகர் விவேக் பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஜினி, கமல் உள்பட அனைவருமே அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களித்தால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தங்களது வீடுகளின் அருகே தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்.

ஏற்கனவே தமிழகத்தில் திரைத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அரசு விதித்து உள்ள கேளிக்கை வரியால் திரைத்துறை நசுங்கும் அபாயம் உள்ளது. இதனால் மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தங்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தற்போது விவசாயம் என்பது பொய்த்து விட்டது. நீர் இருந்தால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும். எனவே இளைஞர்கள் விழித்து கொள்ள வேண்டும். குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணவு கொடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.