பிரத்தியேக செயலியாக வெளிவரும் வாட்ஸ்அப் பிஸ்னஸ்

வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் செயலி சார்ந்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆண்ட்ராய்டுபோலீஸ் வாசகர் வழங்கியுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மற்றொரு மொபைல் எண் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் பச்சை நிற சாட் லோகோ மற்றும் நடுவினில் B என்ற வார்த்தை இடம்பெறலாம் என கூறப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட் மற்றும் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட வசதிகள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. செட்டிங்ஸ் ஆப்ஷனில் பிஸ்னஸ் செட்டிங்ஸ் பகுதியில் குறுந்தகவல்கள் சார்ந்த முழு விவரங்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

பிஸ்னஸ் செட்டிங்ஸ் பகுதியில் ப்ரோஃபைல் எடிட் செய்வது, ஆட்டோமேட்டெட் மெசேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் வசதி வழங்கப்படலாம் என்றும் இந்த சேவையில் பிஸ்னஸ் பெயர், இருப்பிடம், வெரிஃபைடு அல்லது வெரிஃபை செய்யப்படாததை குறிக்கும் பேட்ஜ், மின்னஞ்சல் முகவரி, வலைத்தள முகவரி, வியாபாரம் சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஒவ்வொருத்தருக்கு ஏற்ற வியாபாரங்களை தேர்வு செய்ய பல்வேறு பிரிவுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் முதற்கட்டமாக அடிப்படை வசதிகள் மட்டும் வழங்கப்பட்டு அதன்பின் வெவ்வேறு அம்சங்களும் புதிய அப்டேட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.