அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும்

விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது.

இன்று 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த நடைபயணம் அங்கு நடைபெற்ற நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டனர்.

ஏழுவயதான சிறுமி ஒருவரும் தனது தாயாருடன் இணைந்து 25 கிலோமீற்றர்கள் தூரத்தை ஐந்து மணித்தியாலத்தில் நடந்துமுடித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டு மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொப் ஸ்ராறி தமிழ் அகதிகள் அவையைச் சேர்ந்த றெவர் கிராண்ட் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சூ வோல்ற்றன் உட்பட பலர் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச்செயற்பாட்டாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

மாலை நான்கு மணிக்கு நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது.

நிகழ்வு அறிவித்தல்

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் பேரணி பற்றிய அறிவித்தல் – மெல்பேர்ண்

சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளுக்குள் தொடர்ச்சியாக அவலவாழ்வை எதிர்நோக்கும் எம்முறவுகளின் வாழ்வில் எந்தமாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. பறிபோன தமிழர் நிலமும் காணாமல்போன உறவுகளின் கண்ணீரும் சிறையில் வாடும் எம்சொந்தங்களின் ஏக்கங்களும் இன்னும் ஒரு மாற்றத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

பறிக்கப்பட்ட நிலத்தை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கும் காணாமல்போன உறவுகளை பற்றி இனியேனும் அறிவதற்கும் இன்னும் அவகாசம் வேண்டும் எனக்கோருகின்றது சிறிலங்கா அரசு.

அடிப்படை சுதந்திரவாழ்வை இழந்தவர்களையே இன்னும் பொறுங்கள் என கோருகின்றன சர்வதேச அரசுகள். இத்தகைய நெருக்கடிவாழ்விலும் 18000 பேரின் விபரங்கள் முறையான விதத்தில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டிருந்தும் இன்னும் உருப்படியான நடவடிக்கைகள் எவையும் இல்லை.

ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்திருப்பவர்களை விடுவிக்குமாறு கோரினால் விபரங்களை திரட்டுகின்றோம் எனச்சொல்கின்றது சிறிலங்கா அரசு. மாற்றங்களை கொண்டுவரும் என மக்கள் நம்பி வாக்களித்தும் மீண்டும் ஏமாற்றமே வாழ்வாகிப்போகின்றது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையாவது உருப்படியான அறிக்கையை இம்மாதம் சமர்ப்பிக்கும் அதன்பிறகாவது ஏதாவது மாற்றங்கள் வரும் எனக்காத்திருந்த மக்களை இன்னும் காத்திருக்க சொல்கின்றனர்.

அன்பான உறவுகளே,

சர்வதேச கவனம் திரும்பியுள்ள சூழலில் அதனை சரிவர பயன்படுத்தி எமது உறவுகளுக்கான சுதந்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் போனால் எமது மக்களின் குரல்களுக்கான நியாயத்தை எப்போதுமே பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடும்.

இன்று தாயகம் எங்கும் உறவுகளைத்தேடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்கள் உறவுகளைத்தேடி அவர்கள் எழுப்பும் குரல்களோடு எமது கரங்களையும இறுகப்பற்றிக்கொண்டு தமிழின அழிப்புக்கு நீதிகோருவோம்.

உலகம் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுநின்று எம்முறவுகளுக்கான நீதிக்கான குரலில் இணைந்துகொள்வோம்.

மெல்பேண் பேரணி நிகழ்வு விபரம்:

காலம் – எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி

இடம் – State Library of Victoria, 328 Swanston Street Melbourne (மெல்பேண் சென்றல் புகையிரத நிலையத்திற்கு முன்பாக)

​​மெல்பேணில் நடைபெறும் இக்கவனயீர்ப்பு நிகழ்வுக்கு முன்னதாக நிகழ்விடத்தை நோக்கி பல தொண்டர்கள் கிளன்வேவலி, சன்சைன், பிரஸ்டன் பகுதிகளிலிருந்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளதால் அதில் கலந்துகொள்ளவிரும்புபவர்களை கீழ்க்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு 0410 197 814 அல்லது 0433 002 619 கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனையவர்கள் நேரடியாக நிகழ்வு நடைபெறும் இடமான இடத்தில் (State Library) மாலை 3 மணிக்கு ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் அழைக்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Leave a Reply