அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி மறைவு

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ல் ராக் அண்ட் ரோல் ஹால் ஆப் பேம் பட்டியலில் அவர் இடம்பெற்றார்.

கலிபோர்னியாவின் மாலிபு நகரில் வசித்து வந்த டாம் பெட்டிக்கு இன்று (உள்ளூர் நேரப்படி அக்டோபர் 2) அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சான்டா மோனிகாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மயக்க நிலையிலேயே அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைத்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.