மனுஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் தற்கொலை!

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், ஈழ தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் 32 வயதுடைய ஈழ தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சமையல் கூடம் அருகே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனுஸ் தீவு முகாமில், இரண்டு மாதங்களில் இடம்பெற்றுள்ள இரண்டாவது உயிர் மாய்ப்பு மரணம் இது என்றும் அவர் கூறினார்.

கிழக்கு லோரென்கு இடைத்தங்கல் நிலையத்தில் குறிப்பிட்ட நபர் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்ட சம்பவத்தை அடுத்து, மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மனுஸ் தீவு முகாமில், சிறிலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுளுக்கு முன்னர் இந்த மகாம் திறக்கப்பட்ட பின்னர், இடம்பெற்றுள்ள ஆறாவது மரணம் இதுவாகும்.