அவுஸ்ரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்

உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவிடும், அவுஸ்ரேலிய வலைப்பதிவர் பெல் கிப்சனுக்கு, தனக்கு புற்றுநோய் உள்ளதாக தவறான தகவல்களை அளித்து, வாசகர்களை ஏமாற்றியதற்காக 3,22,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

25 வயதாகும் பெல் கிப்சன், இயற்கை மருத்துவத்தின் மூலம், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானார். வெற்றிகரமாக ஒரு செயலியையும், உணவுப் பழக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்ட அவர், பின்பு தனது நோய் குறித்து பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார்.
கடந்த மார்ச் மாதம், நுகர்வோர் சட்டத்தில் 5 விதிமீறல்களை அவர் செய்துள்ளதாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த விசாரணையை நடத்திய நீதிபதி, கிப்சன், தனது உடல்நலம் குறித்து மிரட்சியில் இருந்து இருக்கலாம். தான் கூறுவது உண்மை என்று நம்பி கூறியிருப்பார் என கூறினார்.அபராதம் விதிக்கப்பட்ட அன்று அவர், மெல்பன் மாகாண நீதிமன்றத்தில் தோன்றவில்லை.

அனுதாபத்திற்கான `உந்துதல்`

கிப்சன், சமூக வலைத்தளங்களில், ஆயுர்வேத மருத்துவம், பிராணவாவு சிகிச்சை , மாவுச்சத்து மற்றும் சர்க்கரை இல்லாத உணவு முறை ஆகியவற்றின் மூலம், தனது புற்றுநோய் தீர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண்கள், அடைக்கலம் தேடுவோர், நோயுற்ற குழந்தைகள் ஆகி்யோரின் அனுதாபங்களை பெறுவதற்கானதாக அவரின் `உந்துதல்` இருந்துள்ளது என நீதிபதி, டெபி மார்டிமர் மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

`தி ஹோல் பாண்டிரி` என அழைக்கப்படும், கிப்சனின் செயலி மற்றும் உணவு குறிப்பு புத்தகம் ஆகியவை 3,27,791 அமெரிக்க டாலரை ஈட்டியுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாக உறுதி அளித்திருந்தார் கிப்சன்.

எனினும், அந்தப் பணம் எந்த தொண்டு நிறுவனத்தையும் சென்று சேரவில்லை. அவர் கூறிய கதைகளில் பொய் இருந்ததும் தெரியவந்தது. இதெல்லாம் பின்னாட்களில், அவரைத் தான் கூறிய தகவல்கள் தவறு என ஒப்புகொள்ளச் செய்தது.