அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டொனி அபொட்டினை தாக்கியதாக நபர் ஓருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். 38 வயது நபர் முன்னாள் பிரதமரின் தலையில் குறித்த நபர் தனது தலையால் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹொபார்ட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நபர் ஓருவர் தன்னை தாக்கினார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் தன்னுடன் கைகுலுக்குமாறு கேட்டார் எனவும் பின்னர் தலையால் இடித்தார் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் செய்திகள் அந்த நபர் அணிந்திருந்த ஆடையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓருபால்திருமணம் குறித்த உமது கருத்திற்காக உங்களை தாக்கவேண்டும் என குறிப்பிட்ட நபர் தெரிவித்ததாகவும் இது ஒரு அரசியல் ரீதியிலான தாக்குதல் எனவும் முன்னாள் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓருபால் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஓருவர் என்னுடன் கைகுலுக்குவது என்ற போர்வையில் தன்னை தாக்குவார் என்பது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலை இரு பிரதான கட்சிகளும் கண்டித்துள்ளன. தொழில்கட்சி தலைவர் பில் சோர்ட்டன் இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

ஓருபால் திருமணம் குறித்த கௌரவமான விவாதத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் வன்முறையையும் அநாகரீகமான நடவடிக்கைகளையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமரை தாக்கிய நபர் தனது செயலிற்கும் ஓருபால் திருமணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமரை நீண்ட காலமாக தனக்கு பிடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.