தலைவர் பிரபாகரன் எங்கே? – திருமதி தமிழ்செல்வன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக, விடுதலைப்   புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு எனது பிள்ளைகளுடன் என்னையும் சேர்த்து இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.

குறித்த முகாமை நெருங்கும் தருணத்தில் எமது கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அழைத்து செல்லப்பட்டோம்.

முகாமில் எங்களை தனி அறையில் நிறுத்தினார்கள். அதன் பின்னர் எங்களை வந்து சந்தித்த புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரி “எந்த நேரத்திலும் உங்களிடம் விசாரணை செய்யப்படலாம்” என கூறினார்.

அப்பொது புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணை செய்தார்கள்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதிலை கூறினேன். தெரியாததை தெரியாது என்றே கூறினேன்.

அதன்பிறகு விசாரணை நிறைவடைந்தது எனக் கூறி என்னை பேருந்தில் ஒன்றில் ஏற்றிவந்து வவுனியாவில் பொது மக்களோடு சேர்த்து விட்டனர்.

அங்கு வைத்து எங்களை பதிவு செய்யும் போது நாங்கள் யார் என்பதை அறிந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எங்களை சூழ்ந்துகொண்டனர்.

அங்கிருந்து மீண்டும் இராமநாதபுரம் முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த முகாமில் வைத்து படையினரால் உயிர் அச்சுறுத்தலை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம் என்று கூறினார்.