அவுஸ்ரேலியா மோதும் பயிற்சி கிரிக்கெட் சென்னையில் இன்று நடக்கிறது!

அவுஸ்ரேலியா – இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17-ந்திகதி சென்னை சேப்பாக்கக்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் (50 ஓவர்) சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஒரு நாள் போட்டிக்கு தயாராகுவதற்கும், இங்குள்ள ஆடுகளத்தன்மையை அறிந்து கொள்வதற்கும் இந்த ஆட்டத்தை அவுஸ்ரேலிய வீரர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.

குர்கீரத்சிங் மான் தலைமையிலான கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியினர், உலக சாம்பியன் அவுஸ்ரேலியாவின் சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டராக அமர்க்களப்படுத்திய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரும்பாலான முன்னணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் பிரபலமில்லாத வீரர்கள் அதிக அளவில் வாரிய லெவன் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம். சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

அவுஸ்ரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கவுல்டர்-நிலே, மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஜேம்ஸ் பவுல்க்னெர், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, கனே ரிச்சர்ட்சன்.

கிரிக்கெட் வாரிய லெவன்: குர்கீரத் சிங் மான் (கேப்டன்), ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், சிவம் சவுத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்த் போட்டர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, அக்‌ஷய் கார்னிவர், குல்வாந்த் கெஜ்ரோலியா, குஷாங் பட்டேல், அவேஷ்கான், சந்தீப் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா, பயிற்சியாளர்: ஹேமங் பதானி.