இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?

சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு.

இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு பல­வி­தத்­திலும் சிறப்பு பெற்ற நவ­ராத்­திரி விரத ஆரம்பம் எப்­போது என்­பதில் இரு பஞ்­சாங்­கங்­க­ளி­டையே குழப்பம் நில­வு­வதால் மக்­க­ளுக்கு ஆதா­ர­பூர்­வ­மாக சரி­யான தினத்தை தெரி­விக்க வேண்­டிய கடப்­பாடு உண்டு.

அதா­வது திருக்­க­ணித பஞ்­சாங்கப் பிர­காரம் 21-.09-.2017 வியா­ழக்­கி­ழமை எனவும் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி 20.-09-.2017 புதன்­கி­ழமை எனவும் குறிக்­கப்­பட்­டுள்­ளன.

இனி நவ­ராத்­திரி ஆரம்­பத்­தினை நிர்­ண­யிப்­ப­தற்­கான பிர­மா­ணங்­களை ஆராய்வோம். இவ்­வி­ரதம் சாந்­தி­ர­மாத அடிப்­ப­டை­யி­லேயே நிர்­ணயம் செய்­யப்­படும். அதா­வது சந்­தி­ரனைக் கொண்டு கணக்­கி­டப்­படும் காலம் என்று பொருள்­படும். பொது­வாக தட்­சி­ணா­ய­னத்தில் வரும் விர­தங்­களில் பெரும்­பா­லா­னவை சாந்­தி­ர­மாத அடிப்­ப­டை­யி­லேயே தீர்­மா­னிக்­கப்­ப­டு­வன. அதன் பிர­காரம் சாந்­தி­ர­மாத ஆஸ்­விஜ சுத்­தப்­பி­ர­த­மை­யன்று நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மென்று கார­ணா­கம சுலோகம் கூறு­கின்­றது.

“ஆஸ்­வயுக் சுக்­ல­பகே ஷது ப்ரதிபந் நவம்­யந்­தகே

ப்ரதி­பத்­தின மாரப்ய விர­தோத்­ஸவ மதா­சரேத்”

இதன்­படி அமா­வாசை சேராத பிர­த­மையில் நவ­ராத்­திரி விரதம் ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மென்­பது தெளி­வா­கின்­றது. இது பொது விதி.

அமா­வாசை சிறிது நேரம் இருக்க பின் பிர­தமை தொடங்கி அன்றே பிர­தமை முடி­வ­டைந்தால் அன்­றுதான் நவ­ராத்­திரி ஆரம்பம். இது சிறப்பு விதி.

“வர்­ஜ­நீயா ப்ரயத்­னேன அமா­யுக்­தாது பார்த்­திவ

த்வியாதி குணைர்­யுக்தா பிர­திபத் சர்­வ­கா­மதா”

இதன்­படி எம்­மு­யற்சி எடுத்­தா­வது அமா­வா­சை­யுடன் சேர்ந்த பிர­த­மையை நீக்க வேண்டும். அத்­துடன் துவி­தீ­யை­யுடன் கூடிய பிர­தமை எல்லா விருப்­பங்­க­ளையும் கொடுக்கக் கூடி­ய­தாகும் என்று ஸ்கந்­த­பு­ரா­ணத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“யதி­குர்யாத் அமா­யுக்தாம் பிர­திபத் ஸ்தாபனே மம

தஸ்ய சாபா­யுதம் தத்வா பஸ்ம சேஸம் கரோம்­யஹம்”

அதா­வது அமா­வாசை சேர்ந்த பிர­த­மையில் எவன் எனக்கு நவ­ராத்­திரி பூஜை ஆரம்­பிக்­கின்­றானோ அவ­னுக்கு சாபம் கொடுத்து அவனைச் சாம்­ப­லாகச் செய்வேன் என்று தேவி கூறு­வ­தாக தேவி

பு­ரா­ணத்தில் உள்­ளது.

மேலும் தேவி புரா­ணத்தில்,

“அமா­யுக்தா ஸதா சைவ ப்ரதிபந் நிந்­திதா மதா

தத்சேத் ஸதா­பயேத் கும்பம் துர்­பிக்சம் ஜாயதே த்ருவம்”

அமா­வா­சை­யுடன் சேர்ந்த பிர­த­மையில் கும்­பஸ்­தா­பனம் செய்­வதால் நிச்­ச­ய­மாக நாட்டில் வறுமை ஏற்­படும். அமா­வா­சை­யுடன் சேர்ந்த பிர­தமை விலக்­கப்­பட வேண்டும்.

“அமா­யுக்தா நகர்த்­தவ்யா ப்ரதிபத் பூஜனே மம

முகூர்த்த மாத்ரா கர்த்­தவ்யா த்விதீ­யாதி குணான்­விதா”

அதா­வது அமா­வா­சை­யுடன் சேர்ந்த பிர­தமை திதி­யன்று எனக்கு நவ­ராத்­திரி பூஜை செய்­யக்­கூ­டாது. இப்­பி­ர­த­மை­யா­னது துவி­தீ­யை­யுடன் சிறிது நேர­மா­வது சேர்ந்­தி­ருந்தால் அத்­தி­னத்தில் பூஜை செய்­வது சிறந்­தது என்­ப­தாகும். இதி­லி­ருந்து அமா­வா­சை­யுடன் கூடிய பிர­த­மையில் ஆரம்பம் கொள்­வது தவ­றென்­பதும் துவி­தீ­யை­யுடன் கூடிய பிர­தமை சிறப்­பு­டை­யது என்­பதும் தெரி­கின்­றது.

கடந்த வருடம் ஆந்­திரா விஜ­ய­வா­டாவில் நடை­பெற்ற பஞ்­சாங்க சதஸில் இது சம்­பந்­த­மாக தர்­ம­சாஸ்­திர விற்­பன்­னர்­களால் பல விளக்­கங்கள் கொடுக்­கப்­பட்டு 21.-09.-2017 அன்று நவ­ராத்­திரி ஆரம்பம் அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதன்­படி இந்­தி­யாவில் வெளி­வந்த ஏவி­ளம்பி வருட சகல திருக்­க­ணித, வாக்­கிய பஞ்­சாங்­கங்கள் யாவற்­றிலும் 21.-09.-2017 அன்று நவ­ராத்­திரி ஆரம்பம் குறிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வி­லுள்ள ஆல­யங்கள் யாவும் இவ்­வாறே நவ­ராத்­திரி ஆரம்பம் செய்­வ­தாக அறி­வித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­கண்ட ஆதார சுலோ­கங்­களின் பிர­காரம் திருக்­க­ணித பஞ்­சாங்­கப்­படி 20-.09-.2017 அன்று பகல் 10-.59 வரையும் அமா­வாசை நிற்­கின்­றது. மறுநாள் பிர­தமை பகல் 10-.35 வரை வியா­பித்­தி­ருப்­பதால் 21.-09.-2017 வியா­ழக்­கி­ழமை நவ­ராத்­திரி ஆரம்பம் குறித்­தமை சரி­யா­கவே உள்­ளது. (ஆஸ்­வீஜ சுத்தம் அன்றே போடப்­பட்­டுள்­ளது.)

இதே நேரம் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி 20.-09-.2017 புதன்­கி­ழமை பகல் 11-.23 வரை அமா­வா­சையும், மறுநாள் பகல் 11-.02 வரை பிர­த­மையும் நிற்­கின்­றன. இப்­பஞ்­சாங்­கப்­படி 21.-09.-2017 வியா­ழக்­கி­ழமை ஆஸ்­வீஜ சுத்தப் பிர­தமை குறிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே 21-.09.-2017 அன்றே நவ­ராத்­திரி விரத ஆரம்பம் கொள்ள வேண்­டு­மென்­பது புல­னா­கின்­றது.

சிலர் நவ­ராத்­திரி இரவில் செய்யும் பூஜை அல்­லவா. இரவில் அமா­வா­சை­ இல்­லைத்­தானே! ஆகவே 20-.09-.2017 புதன்­கி­ழமை அமா­வாசை முடிந்த பின் கும்பம் வைத்து நவ­ராத்­திரி ஆரம்பம் கொள்­ளலாம் எனச் சொல்­வார்கள். நவ­ராத்­திரி கும்­பஸ்­தா­பனம் காலை­யில்தான் செய்ய வேண்­டு­மென்று ஆக­மங்கள் கூறுகின்றன.

ஆகமப்பிரமாண முறையில் 21.-09.-2017 வியாழக்கிழமை நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கும்படி இந்து மக்களைக் கேட்டுக்கொள்வதுடன், தமது தவறுக்கு நியாயம் கற்பிப்பதை விடுத்து தவறை மனித நேயத்தோடு தவறென ஏற்றுக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென வாக்கிய பஞ்சாங்க கர்த்தாக்களை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விடயத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களமும், இந்து மாமன்றமும் கவனமெடுத்து இந்து மக்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும்

ஜோதிடமணி பிரம்மஸ்ரீ.

சி. ஜெகதீஸ்வரசர்மா