அவுஸ்ரேலியாவில் இந்திய பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!

கார் மோதி 24 வார சிசு இறந்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செவிலியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அவுஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த டிம்பில் கிரேஷ் தாமஸ் (வயது 32) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் அஷ்லேயா ஆலன் என்ற கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 24 வார கரு கலைந்தது.

கிரேஷ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிம்மிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது தவறான வழியில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இடது பக்கமாக திரும்புவதற்கு பதிலாக வலது பக்கமாக சென்றுள்ளார்.

இதையடுத்து கிரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் பாரிஸ் ‘இந்த விபத்து அவர் பொறுப்பற்ற முறையில் காரை ஓட்டிச் சென்றதால் ஏற்பட்டதாகும். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது’ என உத்தரவிட்டார். மேலும் தண்டனை முடிந்த உடன் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.