அவுஸ்ரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்!

வங்காளதேசத்தில் அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வங்காள தேச காவல் துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் அவுஸ்ரேலியா வீரர்கள் கடுமையான காவல் துறை பாதுகாப்புடன் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் ஒன்று வீரர்கள் சென்ற பஸ்சின் ஜன்னல் கண்ணாடியில் பட்டது. இதில் கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் வீரர்கள் செல்லும் பாதையும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிட்டகாங் மாநகர காவல் துறை கமிஷனர் இக்பால் பஹர் கூறுகையில் ‘‘பஸ் சென்ற பாதையில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கடுமையான பாதுகாப்பு வாகனத்துடன் சென்ற பஸ் மீது ஒரு கல் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய விபத்து என்று நாங்கள் நினைக்கவில்லை.

அவுஸ்ரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் சீன் கர்ரோல் முன்னெச்சரிக்கை காரணமாக பாதுகாப்பை அதிகரிக்கக் கேட்டுக் கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் வீரர்கள் சென்ற பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. சிறிய விபத்திற்குப் பிறகு வங்காள தேச அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க பாதுகாப்பு மேலாளர் தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய ஏற்கனவே பாதுகாப்பு காரணமாக வங்காள தேச தொடரை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.