இசைப்பிரியா கைதான தகவல் – சரத் பொன்சேகா

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் காணாமல் போயுள்ளார்கள் என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. .ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதி ஆகிய பின்னரே யுத்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

‘இசைப்பிரியா’ என்ற ஊடகவியலாளர் தொடர்பிலும் குற்றச்சாட்டு வந்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரே அவை இடம்பெற்றுள்ளன.

யுத்தம் நிறைவடைந்து வவுனியா முகாமிலிருந்து இசைப்பிரியா கைது செய்யப்பட்டிருந்தார்.

அவை இடம்பெறும் போது ஜகத் ஜயசூரிய போன்ற நபர்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பாக இருந்தனர்.

எனினும் பெரும் எண்ணிக்கையிலானோர் இவற்றில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய சுமார் 7 அல்லது 8 பேர் இருப்பார்கள்.

ஆகவே உண்மையைக் கண்டறிந்து சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்