288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்த பெக்கி விட்சன் தனது பயணத்தை முடித்து விட்டு இன்று பூமியை வந்தடைகிறார்.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இவர் அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றியுள்ளார். பெக்கி தனது பயணத்தை முடித்து விட்டு இன்று பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் பயணம் செய்யும் சோயுஸ் விணகலம் கஜகஸ்தானில் தரையிறங்கியதும் அங்கிருந்து ஹூஸ்டன் புறப்படுகிறார். இவர் தன் வாழ்நாளில் 655 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார்.

இவர் இதற்கு முன் விண்வெளி ஆய்வகத்துக்கு 2 தடவை கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெக்கி விட்சன் பெற்றுள்ளார். மேலும் விண்வெளி ஆய்வகம் சென்ற நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் விஞ்ஞானி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.