கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதாம்!

“தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார்.

“சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊழலற்ற தூய்மையான அரசியல் இயக்கமாக கூட்டுணர்வுடன் கட்சியை கட்டியெழுப்புவதற்கான பரந்த அரசியல் செயற்றிட்ட செய்தியை நாட்டுக்கு வழங்குவதற்காகவே, செப்டெம்பர் 3ஆம் திகதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆண்டுவிழா கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

மோசமான நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் கூட்டு அரசாங்கமே மீட்டது. நாடு முகம்கொடுத்திருந்த பல்வேறு சவால்களை வெற்றிகொண்டது. நாட்டுக்கும், மக்களுக்கும் பணியை ஆற்றுவதற்காகவும், கூட்டரசாங்கத்தின் பயணத்தை பலப்படுத்துவதற்கும், சுதந்திரக் கட்சியையும் தூய்மையான, பலமான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கும் தாம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் இன்றி செயற்படக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கும், தூய்மையான அரசியல் இயக்கமே இன்று நாட்டுக்கு தேவையாகும்.

அதற்காக, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டு நாட்டை முதன்மைப்படுத்தி, நாட்டுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கையில்,

கேள்வி:  தனித்து ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான கட்சிகள் இரண்டும் தீர்மானித்துள்ளனவா? 

“தற்போதைய நாடாளுமன்ற நிலைமையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் 106, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டணி இணைந்து 95 உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருக்கின்றனர். இவர்களில் எந்தக் கட்சிக்கும் 113 என்ற பெரும்பான்மை தற்போதைய நாடாளுமன்றத்தில் இல்லை. ஆகையால், தனித்து ஆட்சியமைப்போம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.

கேள்வி:  தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம், இவ்வருட இறுதியில் நிறைவடையவுள்ளது. மீண்டும் அதைத் தொடரும் சாத்தியக்கூறு இருக்கிறதா? 

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூடியே முடிவெடுத்திருந்தது. அதற்கமையவே இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. டிசெம்பரில் நிறைவடையவுள்ள ஒப்பந்தத்தை புதுப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவே முடிவுசெய்யும்.

இதில் முக்கியமான விடயமொன்றையும் குறிப்பிடவேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுகிறார்கள். நான், ஜனாதிபதி என்ற ரீதியில் செயற்படுகின்றேன். ஆகவே, என்னுடைய தீர்மானமென்பது பொதுவானதாக இருக்குமே தவிர கட்சி சார்ந்ததாக இருக்காது”

கேள்வி:  அப்படியென்றால் 2020வரை இந்த ஆட்சியைக் கொண்டுநடத்த முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறதா? 

“நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படியில்லையென்றால் சூழ்ச்சி இடம்பெறவேண்டும்”

கேள்வி:  தற்போது நிலுவையிலுள்ள விசாரணைகள் 2020வரை இழுபட்டுக்கொண்டே செல்லுமா? 

“அது நீதித்துறை சார்ந்த விடயம். அவர்களது விசாரணையின் துரிதத் தன்மையை அவர்கள்தான் கூறவேண்டும். குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஆணைக்குழுக்கள் தங்களது கடமைகளை உணர்ந்து செய்வர்”

கேள்வி:  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 7 உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படுகிறதே, இதுதொடர்பில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் உங்களது நிலைப்பாடு என்ன?’ 

“தவறு யார் செய்தாலும் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை”

கேள்வி:  பாடசாலை அதிபர் ஒருவர், 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்பதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்கள் இன்னமும் வெளியில் இருக்கின்றார்களே? 

“நீதி அனைவருக்கும் பொதுவானது. இலஞ்சம் பெற்ற அதிபருக்கான தீர்ப்பு வருவதற்கு எட்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன. கடந்த காலத்தில் கொள்ளையடித்தவர்கள் நுட்பமாகக் கொள்ளையடித்துள்ளனர். எனவே, அவற்றை நிரூபிப்பதற்கான சாட்சி, ஆதாரங்கள் அவசியப்படுகின்றன. அவற்றை இப்பொழுது திரட்டிக்கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில், மக்கள் எதிர்பார்ப்பதுபோல் தீர்ப்புக் கிடைக்கும்.

பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் தலைவர்களுக்குத் தண்டனை கிடைக்கப் பல வருடங்கள் சென்றிருந்ததே. அதேநேரம், சில நாடுகளின் சட்டதிட்டங்கள் துரிதமாகச் செயற்படுகின்றன. அமெரிக்காவில் கடந்த வருடம் என்னோடு ஒரே மேசையில் சாப்பிட்ட கொரிய ஜனாதிபதி, இரண்டு மூன்று மாதங்களில் தண்டனைக்கு உள்ளாகினார். அதேபோல், பாகிஸ்தானின் நவாஸ் ஷெரீப் விவகாரமும் முக்கியத்துமானது. பலத்தில் இருக்கும்போதே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆகவே, எமது நிலைப்பாடும் அதுதான். ஆனால், உரிய சாட்சிகள் மற்றும் நிரூபிக்கத்தக்க ஆதாரங்களுடன் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குரிய சட்டச்சிக்கல்கள் தொடர்பிலும் ஆராய்கின்றனர்”

கேள்வி:  சட்டதிட்டங்களைச் சரியான முறையில் கையாளவில்லை என்று கூறியே, விஜயதாச ராஜபக்ஷ விலக்கப்பட்டார். நீங்கள் கூறவரும் சட்டச்சிக்கல்களும் இவ்வாறானதா?’ 

“விஜயதாச விவகாரம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எடுக்கப்பட்ட முடிவு. அவரவர் கட்சிகளில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு நாங்கள் மரியாதை கொடுக்கின்றோம். அதுதான் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம். ரவி கருணாநாயக்கவுக்கு தேசிய லொத்தர் சபை வழங்கப்பட்டபோதும் விமர்சித்தீர்கள். ஆனால், அது கட்சியின் தீர்மானம். ஆகவே, கட்சித் தீர்மானங்களை எதற்கும் ஒப்பிடாதீர்கள்”

கேள்வி:  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிகழுமா?’ 

“எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியாக இருப்பினும் பரவாயில்லை”

கேள்வி:  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகிறாரே? 

“கடந்த மாநாடு பொலன்னறுவையில் என்னுடைய தலைமையில் நடைபெற்றபோது, அக்கூட்டத்தில் என் தலைமையை ஏற்று அவரும் மேடையில் அமர்ந்துகொண்டார். கட்சியின் உயர்மட்டம் கூடியே என்னைத் தலைவராக்கினர். அது அவரின் முன்னிலையில்தான் நடந்தது. இப்பொழுது ஏன் இப்படிச் சொல்கிறாரெனத் தெரியவில்லை”

கேள்வி:  கட்சிகளின் முடிவுக்கு நீங்கள் ஆதரவளிப்பதென்பது அரசியல் சாசனத்துக்கு முரணானதில்லையா? அதேபோல், தேசிய கணக்காய்வுச் சட்டம் போன்ற சட்டங்கள் நிலுவையில் இருக்கின்றனவே? 

“அரசியல் சாசனத்துக்கு முரணாக எதையும் செய்யவில்லை. கட்சிகளின் சுதந்திரத் தன்மையில் தலையிட விரும்பவில்லை. மற்றையது, தேசிய கணக்காய்வுச் சட்டத்தைக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்காக வருந்துகிறேன். சில சில பிரச்சினைகளால் அச்சட்டத்தைக் கொண்டுவரமுடியாமல் இருக்கிறது. ஆனாலும், துரித நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்’

கேள்வி:  மேஜர் ஜெனரல் ஜகத் ஜனசூரிய மீதான குற்றச்சாட்டு பற்றி? 

“ஊடகங்கள் வாயிலாகவே நானும் அறிந்துகொண்டேன். அவரது சேவைக்காலம் முடிவடைந்துவிட்டது. அதற்கான அறிவித்தலை நாங்கள் அனுப்பியிருக்கிறோம். விரைவில் இங்கு வருவார் என நம்புகிறோம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் கவனஞ் செலுத்துவோம்”

கேள்வி: ஒருமுறைக்கு மேல் ஜனாதிபதிப் போட்டியில் நிற்கமாட்டேன் என்று வாக்குறுதி வழங்கினீர்கள். ஆனால், கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோள் வேறுமாதிரியாக இருக்கிறதே? 

“நான் அறிந்தமட்டில் எவரும் உத்தியோகபூர்வமாக என்னைக் கேட்கவில்லை. அப்படியொரு எண்ணம் எனக்கும் இல்லை” என்றார்.