ஒரே சினிமா தான் இனி – விவேக் ஓபராய்

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. ஒரே சினிமா தான் இனி என்று விவேகம் பத்திரியாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக் ஓபராய் கூறினார்.

இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் விருப்ப நடிகைான அஜித் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

வருகிற ஆகஸ்டு 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் விவேக் ஓபராய் பகிர்ந்து கொண்டார்.

படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விவேக் ஓபராய், தன்னுடைய நேரத்தை பெரும்பாலும் குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவர். இயக்குனர் சிவாவிடம் கதை கேட்ட கொஞ்ச நேரத்திலேயே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிவித்தார். மேலும் தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்ததாக கூறினார்.

விவேகம் கதையை கேட்ட பிறகு, அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன்.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன்.

சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

காஜல் அகர்வால் நடித்த முதல் படமே என்னோடு தான். பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேகம் படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் சென்சிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது.

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் தான் 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த போது, அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்.

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. பாகுபலி என்ற டப்பிங் படம் தங்கல் என்ற இந்தி படத்தை விட அதிகம் வசூல் செய்திருக்கிறது. ஒரே சினிமா தான் இனி.  இவ்வாறு கூறினார்.