Home / இலக்கியமுரசு / பொதுமுரசு / மெல்பேர்ணிலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெடிகுண்டு பார்சல்!
20280297_1073844982750411_106055883526473888_o-300x269

மெல்பேர்ணிலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெடிகுண்டு பார்சல்!

புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு மாத இதழ் தபாலில் வந்திருந்தது.

அதைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்.பிரதம தபாலகத்துக்குச் சென்றிருந்தேன். என்னிடமிருந்த துண்டை வாங்கிப் பரிசீலித்துவிட்டு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

பத்து நிமிடம்.
அழைத்தார்கள்.

அடையாள அட்டையை வாங்கி , நான் தான் அந்தப் பார்சலுக்கு உரியவன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். மேசையில் கிடந்த மற்றவர்களின் பார்சல்கள் , ஆட்டை விழுங்கிய பாம்பு போல வீங்கி வெடிக்கக் காத்திருக்க, எனக்கான பார்சல் ,நாலைந்து நாட்கள் சாப்பிடாத தேகத்தொடு ஒட்டி உலர்ந்திருந்தது. வெறும் பத்துப் பேப்பர் என்றால் அப்படித்தானே இருக்கும்.

எல்லாம் சரி. பின்னர் ஒரு கத்தியை எடுத்து, ‘சர்’ரென பார்சலின் வயிற்றைக் கிழித்தார் அங்கிருந்த சிற்றூழியர். பார்சலுக்குள் கட்டிப்பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்த பேப்பர்கள், திடீரென முழிப்பு வந்து அந்த ஊழியரின் கைகளில் பதறித் துடித்தபடி விழுந்தன.

வெளிநாடுப் பார்சல்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஒரு சிங்களவர். அவர் போனில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்க , சிற்றூழியர் கைகளில் விழுந்த பத்திரிகைகளை எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டத் தொடங்கினார். வாசிப்பில் அவ்வளவு ஆர்வம் போல என எண்ணிக் கொண்டேன்.

எழுத்துக் கூட்டி அவர் அந்தப் பேப்பரை வாசித்து முடிக்க எப்படியும் ஒரு கிழமை பிடிக்கும். அது அவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தலைப்புகளை மட்டும் விரலால் எழுத்துக்களைத் தொட்டுக்கொண்டே வாசிக்கத் தொடங்கினார்.

ஒரு பக்கத்தில் அவரின் விரல் விறைத்து அப்படியே நின்றுவிட்டது. கண்கள் நிலை குத்தின. அப்படியே என்னை நிமிர்ந்து பார்த்தார். கஞ்சா கடத்தியனைக் கூட அப்படிப் பார்க்க மாட்டார்கள். அப்படியொரு பார்வை.

அதன்பின்னர் அந்தச் சிற்றூழியரின் உடல்மொழி தடாலடியாக மாற்றமடைந்தது. சிங்கள உயரதிகாரியிடம் மெல்லிய குரலில் பதற்றத்தோடு ஏதோ சொன்னார். அவர் கைகளுக்கு பேப்பர் போனது. சிற்றூழியர் கண்ணிவெடியைக் கண்டுபிடித்தது போல திரும்பத் திரும்ப அந்தப் பக்கத்தின் தலைப்பை ஒரு தன் விரல்களால் தொட்டுக் காட்டினார். அதிகாரிக்கு தமிழ் பெரிதாக வாசிக்க வராது என்பதை அவர் முகமே சொல்லிற்று.ஒரு பெருமூச்சோடு பேப்பரைக் கொடுத்தார்.

” இப்ப தாறம். இனி இப்பிடி பேப்பரை எடுக்க வேண்டாம்” இராணுவத் தோரணை சிற்றூழியரின் குரலில்.

“ஏன்?”

” இதெல்லாம் தடை. புலிகளைப் பற்றி எழுதின பேப்பர் பார்சல்ல போட்டால் குடுக்க மாட்டம்”

எனக்கு கொதியேறிய, குரல் உயர்ந்தது. என்னை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

” உதில புலிகளைப் பற்றி என்ன எழுதியிருக்கு?”

” ஈழம் எண்டு இருக்கு,அப்ப புலிகளைப் பற்றித்தானே இருக்கும்”

எட்டிப் பார்த்தேன்.

‘ஈழ அகதிகளின் இன்றைய நிலை!’

இதுதான் அந்தத் தலைப்பு. பிரிட்டனில் உள்ள ஈழ அகதிகள் , அரசியல் தஞ்சம் பெற்றுத்தருவதாக எப்படி ஈழத்தமிழர்களாலேயே ஏமாற்றப்படுகிறார்கள் என்று சொல்லும் கட்டுரை அது.

” வேணுமெண்டா வாசிச்சிட்டு சொல்லுங்கோ,அதில புலிகளைப் பற்றி என்ன இருக்கெண்டு. ஈழமெண்டா தமிழீழம் இல்லை. அது இலங்கைக்கு இன்னொரு பேர்”

என் குரலில் ஆத்திரம் கூடியிருந்தது.

அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

” இப்பிடி பேப்பர், புத்தகம் பார்சல்ல வாறதுக்கு தடை. ஆக, தமிழினியின்ர புத்தகம் மட்டும் வந்தாக் குடுக்கலாம் எண்டு சொல்லியிருக்கினம்”

” எப்ப தொடக்கம் உந்தத் தடை? அரசாங்கம் எப்ப அறிவிச்சது? தமிழினியின்ர புத்தகத்தை தவிர மற்றதெல்லாம் புலிகளின்ர புத்தகமோ?”

பதிலைச் சொல்லாமல் , 230 ரூபா ‘தபால் கையளிக்கும் சேவைக்கட்டணமாக’ வாங்கிக் கொண்டு பார்சலைத் தந்தார்கள். வாங்கிக் கொண்டு நடக்கும் போது, அந்தச் சிற்றூழியர் திரும்பவும் சொன்னார்,

“இனிமேல் பார்சலில இதை அனுப்பச் சொல்ல வேண்டாம். அடுத்த முறை தரமாட்டம்”
நின்றேன். திரும்பிப் பார்த்தேன்.சொன்னேன்.

” அடுத்த முறையும் பார்சல்ல தான் வரும். பாப்பம் என்ன செய்யிறீங்களெண்டு’”

(எப்போது தொடக்கம் இந்தப் பேப்பர், புத்தகங்கள் தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பத் தடை என்று உங்களில் யாருக்கும் தெரியுமா?)

தங்கராஜா பிரபாகரன்

About குமரன்

Check Also

Pillaiya

வருடமொருமுறை வரும் ஆரியாதிக்கமிக்க வருடப்பிறப்பும் அதன் திணிப்பும்

தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஊன்றித் திளைத்தவர்களாகிய எம் தமிழினம், இயற்கையையும் முருகனையும் தொன்றுதொட்டே வழிபட்டு வந்தனர். எம் மதம் சைவம் ...